சினிமா

RRR-ஐ பாலிவுட் படம்னு அழைப்பதா? ஆஸ்கர் தொகுப்பாளர் பேச்சால் கொதித்தெழுந்த நெட்டிசன்ஸ்!

RRR-ஐ பாலிவுட் படம்னு அழைப்பதா? ஆஸ்கர் தொகுப்பாளர் பேச்சால் கொதித்தெழுந்த நெட்டிசன்ஸ்!

JananiGovindhan

உலக சினிமாத்துறையின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கரை வென்ற முதல் நேரடி இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது RRR. ராஜமெளலியின் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு இசையமைத்ததற்காக கீரவாணியும் சந்திரபோஸும் இணைந்து சிறந்த பாடலுக்கான விருதை பெற்றிருக்கிறார்கள்.

இந்திய திரையிசை உலகில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு ஆஸ்கரை கையில் ஏந்திய இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் கீரவாணி என்கிற மரகதமணி. இந்த விருதை அலங்கரித்ததற்காக ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே தற்போது மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஏராளமானோர் கீரவாணிக்கும் ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கும் தங்களது வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், 95வது ஆஸ்கர் விருது விழாவின் போது அதனை தொகுத்து வழங்கும் ஜிம்மி கிம்மெல், ராஜமெளலியின் RRR படத்தை பாலிவுட் படம் என அழைத்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. RRR படத்தை பாலிவுட் படம் என கூறியதற்காக ரசிகர்கள் பலரும் கொதித்தெழுந்து தத்தம் கண்டனங்களையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஏனெனில், இந்திய சினிமா என்றாலே இந்தி படங்கள்தான் என ஒரு காலத்தில் கருதப்பட்ட நிலை தற்போது தலைகீழாகி தென்னிந்திய திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் கோலோச்சும் அளவுக்கு வளர்ந்து வரவேற்பை பெற்று வருவதால் இந்த கொதிப்பு ரசிகர்களுக்கு நியாயத்தை கொடுத்திருக்கிறது.

ஆகையால் ஆஸ்கர் விருது மேடையில், ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை பாலிவுட் படம் என அழைத்ததால் “படக்குழுவினர் பல நாட்களாக RRR படத்தை இந்திய திரைப்படமாகவும், தெலுங்கு படமாக மட்டுமே தெரியப்படுத்தி வரும் வேளையில், ஆஸ்கர் மேடையில் அதனை பாலிவுட் படம் என அழைத்தது, சர்ச்சைகளையும், முரண்பாடுகளையும் ஆஸ்கர் குழு விரும்புவதையே காட்டுகிறது” என ரசிகர் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்வாறு ஏராளமானோர், “RRR பாலிவுட் படமல்ல. அது தெலுங்கில் இருந்து உருவான ஒரு இந்திய திரைப்படம்” என காட்டமாகவே தெரிவித்து வருகிறார்கள். அதேவேளையில், 95வது ஆஸ்கர் விருது விழாவில் விருது வழங்குவோரில் ஒருவராக இருக்கக் கூடிய இந்திய நடிகை தீபிகா படுகோன், RRR-ன் நாட்டு நாட்டு பாடலுக்கான நேரலை நடனத்துக்கு அழைக்கும் போது RRR-ஐ இந்திய தயாரிப்பில் உருவான தெலுங்கு படம் என்றே தெரிவித்திருந்தார்.

முன்னதாக, RRR முழுக்க முழுக்க தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட பக்கா டோலிவுட் படம் என இயக்குநர் ராஜமெளலி தொடர்ந்து தெரிவித்ததொடு, RRR-ஐ இந்திய படம் என கூறுமாறும் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.