ஜானி மாஸ்டர் web
சினிமா

"புகாரில் உண்மை இல்லை; குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிந்து விடுகிறேன்!" - ஜானி மாஸ்டர் மனைவி சவால்

Rishan Vengai

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்குநராக இருப்பவர் ஜானி. தனுஷ் நடித்த மாரி 2 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு எண்ட்ரி கொடுத்த அவர், சமீபத்தில் அரபிக் குத்து, ஜாலி ஓ ஜிம்கானா, ரஞ்சிதமே, காவாலையா என பல ஹிட்டடித்த தமிழ் பாடல்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார். 

சமீபத்தில் நடிகர் தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் “மேகம் கருக்காதா” என்ற பாடலுக்கு நடனம் இயக்கியதற்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜானி

இந்த நிலையில், அவருடன் சேர்ந்து பணியாற்றிய 21 வயதான பெண் உதவி நடன இயக்குநர் ஒருவர், டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியல் புகார் அளித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்த பெண் அளித்த புகாரில், “ஜானி மாஸ்டர் அவரது குழுவில் உதவி நடன இயக்குனராக சேரும்படி என்னை 2019-ல் கேட்டார். அதன்பேரில்தான் அவரின் நடனக்குழுவில் இணைந்தேன். பின் உதவி நடன இயக்குனராக பணியாற்றுவதற்காக சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு படப்பிற்காக சென்றுள்ளேன். அச்சமயங்களில் ஓட்டலில் வைத்து என்னை ஜானி மாஸ்டர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார்” என்று தெரிவித்திருந்தார்.

புகாரளித்த பெண் 4 ஆண்டுகளுக்கு முன்பே 16 வயதில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக போக்சோ பிரிவில் வழக்கு பதிந்த காவல்துறை, கடந்த 19ம் தேதி கோவாவில் வைத்து நடன இயக்குநர் ஜானியை கைது செய்தனர்.

புகாரில் உண்மையில்லை என மறுத்த ஜானி மாஸ்டர் மனைவி..

ஜானி மாஸ்டர் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை என மறுத்திருக்கும் அவரின் மனைவியான ஆயிஷா, அவருடைய குணம் அப்படியானது இல்லை, அவரை அழிக்க பெரிய சதி நடக்கிறது, அவர்மீதான குற்றத்தை நீருபித்து விட்டால் நான் மாஸ்டரை பிரிய தயாராக இருக்கிறேன் என சவால்விடும் வகையில் பேசியுள்ளார்.

பாலியல் புகார் குறித்து பேசியிருக்கும் அவர், “பெண் 16 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு அருவருப்பானது. அதில் எந்த உண்மையும் இல்லை. சிறுமி ஆதாரம் காட்டினால், நான் மாஸ்டரை விட்டு விலகிவிடுகிறேன். எனக்கும் மாஸ்டருக்கும் திருமணமாகி 14 ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறோம், அவரை எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். அவரது குணம் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வகையில் மோசமானது இல்லை.

இதே பெண்தான் பல தொலைகாட்சி நேர்காணல்களில், தனக்கு வழங்கப்பட்ட பணிக்காக மாஸ்டருக்கு நன்றியுள்ளவராக இருப்பதாக கூறினார். அப்போது அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லையா? ஏன் அப்போதெல்லாம் புகார் அளிக்கவில்லை? கடந்த ஒரு வருடமாக தனியாக பிரிந்து சென்றபிறகு, திடீரென்று இப்படி ஒருபுகாரை கூற காரணம் என்ன? அவரை அழிக்கவா?” என்று தெலுங்கு செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஆயிஷா பேசியுள்ளார்.

மேலும் புகார் அளித்த பெண்ணிற்கு நடன அசோசியேசனில் உறுப்பினர் அட்டை வாங்கி கொடுத்தது முதல், நடன வாய்ப்புகளை வழங்கியதுவரை பல்வேறு உதவிகளை ஜானி மாஸ்டர் செய்ததாக அவருடைய மனைவி கூறியுள்ளார்.