சினிமா

செப். 30 ல் வெளியாகிறது 25 ஆவது ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம்

செப். 30 ல் வெளியாகிறது 25 ஆவது ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம்

கலிலுல்லா

சர்வதேச திரை ரசிகர்களின் ஒரே சூப்பர் ஸ்டாரான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரெய்க் நடித்துள்ள 'நோ டைம் டு டை', வரும் வியாழனன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்தப் பின்னணி இசையை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. அலட்சியம் கலந்த புன்னகையுடன் கையில் துப்பாக்கி ஏந்திக்கொண்டு, விறுவிறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட்டு எதிரியின் கோட்டைக்குள்ளேயே நுழைந்து அவர்களை வீழ்த்தும் வல்லமை கொண்ட கதாபாத்திரம் தான் ஜேம்ஸ்பாண்ட் 007. சர்வதேச திரை ரசிகர்களின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்றே கூறலாம்.

1962 ஆம் ஆண்டு ஷான் கேனரி நடிப்பில் வெளியான 'டாக்டர் நோ' தான், ஜேம்ஸ்பாண்ட் வரிசையில் வந்த முதல் திரைப்படம். இங்கிலாந்தின் உளவு அதிகாரி 007 ஆக, ஷான் கேனரி மட்டும் ஆறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். அவரைத் தொடர்ந்து ரோஜர் மூர் உள்ளிட்ட நால்வர் பாண்ட் பாத்திரத்தில் அரிதாரம் பூசி, திரையில் சாகசங்கள் புரிந்தனர். ஆறாவது நபராக டேனியல் கிரெய்க், முதல் முறையாக 2006 ஆம் ஆண்டு 'கேஸினோ ராயல்' திரைப்படத்தில் ஜேம்பாண்டாக தோன்றினார்.

குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கை ஃபால், ஸ்பெக்டர் போன்ற திரைப்படங்களிலும், 007 ஆக சாகசங்கள் புரிந்து ரசிகர்களை மகிழ்வித்தார் கிரெய்க். இந்த வரிசையில் 'நோ டைம் டு டை' திரைப்படம் வரும் வியாழனன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. ஜேம்ஸ்பாண்டாக டேனியல் கிரெய்க் தோன்றும் கடைசி திரைப்படம் இது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த 'நோ டைம் டு டை' திரைப்படம், கொரேனா பரவல் காரணமாக 18 மாத தாமதத்துக்குப் பின், வரும் வியாழனன்று திரைக்கு வருகிறது. ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தை மையமாகக் கொண்ட 25 ஆவது திரைப்படம் என்ற சிறப்பையும் இந்தத் திரைப்படம் பெற்றுள்ளது.