சினிமா

‘அம்மா’ முடிவு சரியா..? என்ன சொல்கிறார் நடிகர் கமல்ஹாசன்..!

‘அம்மா’ முடிவு சரியா..? என்ன சொல்கிறார் நடிகர் கமல்ஹாசன்..!

webteam

‘அம்மா’வின் அனைத்து உறுப்பினர்களையும் கலந்து ஆலோசிக்காமல் திலீப்பை மீண்டும் சேர்த்தது தவறான விஷயம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ (Association of Malayalam Movie Artists) . இதன் புதிய தலைவராக மோகன்லால் சமீபத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரத்தில் சிக்கிய பிரபல நடிகர் திலீப் ‘அம்மா’வில் மீண்டும் சேர்க்கப்பட்டார். கடந்த ஆண்டு சர்ச்சையில் சிக்கிய நேரத்தில் திலீப் அந்த அமைப்பிலிருந்து விலக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட  நடிகை அந்த அமைப்பிலிருந்து உடனடியாக விலகினார். எனவே அந்த நடிகைக்கு ஆதரவாக அவரின் தோழியான மற்ற மூன்று நடிகைகளும் ‘அம்மா’விலிருந்து வெளியேறினர். ‘அம்மா’ பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாமல் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது என்பதே அவரின் குற்றச்சாட்டு ஆகும். ‘அம்மா’விலிருந்து விலகிய நடிகைகளுக்காக சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகியது. அதேபோல ‘அம்மா’வின் தலைவராக உள்ள மோகன் லாலுக்கும் எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன.

இதனிடையே ‘அம்மா’வில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் இறுதியாக தனது மவுனத்தை கலைத்தார் அதன் தலைவர் மோகன்லால். இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், “ ‘அம்மா’வின் பொதுக்குழு கூட்டத்தில் திலீப் மீதான தடையை நீக்க எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர். ‘அம்மா’ எப்போதுமே அதன் ஜனநாயக அடிப்படையில் ஒருமித்த குரல் பக்கமே நிற்கிறது. திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டது தொடர்பாக அலுவலக ரீதியாக இன்னும் அவரிடேமே தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்குள் ஊடகங்கள் இதனை ‘அம்மா’விற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. பொதுக்குழு கூட்டத்தில் ‘அம்மா’வின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கவில்லை. ஆனால் அதன்பின் அவர்கள் தங்களது எதிப்பு குரலை பதிவு செய்து வெளியேறியுள்ளனர். எனவே அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு குறித்து ஆராய ‘அம்மா’ தலைமை தயாராகவே உள்ளது” என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கின் தொடக்கத்தில் இருந்தே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக சங்கம் இருப்பதாகக் கூறிய அவர், சட்டரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் நடிகர் சங்கத்தில் இருந்து விலகியிருக்க திலீப் விரும்பியதாகவும், அதன்படி வழக்கில் நிரபராதி என அவர் நிரூபிக்கும் வரை விலகியே இருப்பார் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், ‘அம்மா’வின் அனைத்து உறுப்பினர்களையும் கலந்து ஆலோசிக்காமல் திலீப்பை மீண்டும் சேர்ந்தது தவறான விஷயம் என தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “ யாராவது தவறு செய்திருக்கிறார்கள் என நிரூபிக்கப்பட்டால் அது தவறுதான். தனிப்பட்ட நபராக வேண்டுமானால் மன்னிக்கலாம். ஆனால் ஒரு கூட்டத்தில் உறுப்பினரை சேர்க்கும் விஷயத்தில், மற்ற அனைத்து உறுப்பினர்களின் கருத்தையும் கேட்க வேண்டும். திலீப்பை மீண்டும் ‘அம்மா’வில் சேர்க்கக் கூடாது என்ற உறுப்பினர்களின் கருத்தையும் ‘அம்மா’ முன்னதாகவே கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும் செயல்படவில்லையென்றால் ‘அம்மா’வால் எப்படி செயல்பட முடியும். ஆண், பெண் பாலியல் சமத்துவமின்னை என்பது திரையுலகில் மட்டுமல்ல. பல துறைகளிலும் காணப்படுகிறது. ஆனால் அனைத்து துறைகளிலும் பாலியல் சமத்துவம் கொண்டுவர வேண்டும். மற்ற துறைகளைக் காட்டிலும் பாலியல் சமத்துவமின்னை மலையாள திரையுலகில் சற்று குறைவாக காணப்படுவதாகவே உணர்கிறேன். இருப்பினும் பாலியல் சமத்துவம் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்” என்றார்.