இந்தி திரையுலகின் உச்ச நட்சத்திரமான Big B என அழைக்கப்படும் அமிதாப் பச்சனின் காலியா படத்தில் இடம்பெற்றிருந்த ஐகானிக் காமெட் காட்சி ஒன்று 40 ஆண்டுகள் ஆகியும் இப்போதும் இணையவாசிகளின் மீம் டெம்ப்ளேட்டாகவே இருக்கிறது.
பர்வீன் பாபிக்கு அமிதாப் பச்சன் சமையல் கற்றுக் கொடுக்கும் காட்சி வரும். அதில் பர்வீன் பாபியிடம் எப்படி முட்டையை உடைக்க வேண்டும் என ரகசியமாக சைகையாலேயே சொல்லித் தருவார் அமிதாப். பர்வீனும் அமிதாப் சொல்வதை அப்படியே செய்ய கடைசியில் அந்த முட்டையை தலையில் வைத்து அடித்து உடைப்பார்.
daddy's little princess-க்கு இந்த காட்சி சிறப்பாக பொருந்தும் என்றெல்லாம் நெட்டிசன்கள் அவ்வப்போது பகிர்வது வாடிக்கை. ஆனால் படத்தில் முட்டையை எப்படி உடைப்பது என பர்வீன் பாபிக்கு கற்றுக் கொடுத்த அமிதாப் பச்சனுக்கு உண்மையிலேயே முட்டையை உடைக்க எப்படி சிரமப்பட்டார் என்பதை குரோர்பதி 14 நிகழ்ச்சியில் பகிர்ந்திருக்கும் வீடியோவை நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகம் பகிர்ந்திருக்கிறது.
அதன்படி கோவிந்தா நாம் மேரா படத்தின் புரோமோஷனுக்காக நடிகர் விக்கி கவுஷலும், நடிகை கியாரா அத்வானியும் அமிதாப் தொகுத்து வழங்கும் புகழ்ப்பெற்ற குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேறிருப்பார்கள். அந்த எபிசோடில்தான் அமிதாப் தனக்கு தெரிந்த சமையல் பற்றி பேசியிருக்கிறார்.
அப்போது கியாரா மற்றும் விக்கியிடம் உங்களுக்கு சமைக்க தெரியுமா என கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு எப்போவாவது சமைப்பேன் என கியாராவும், டீ மட்டும் போட தெரியும் என விக்கியும் கூறியிருக்கிறார்கள். அதே சமயத்தில் பேசிய அமிதாப், “நானும் விக்கியும் ஒரே கோட்டில்தான் இருக்கிறோம். விக்கிக்கு டீயாவது போட தெரியும். ஆனால் எனக்கு சுடு தண்ணீர்தான் வைக்கத் தெரியும்.
வெளிநாட்டுக்கு சென்ற போது தனியாக இருக்க வேண்டிய சூழல் வந்தது. அப்போது சமையல் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்படி தொடங்கியதில் ஒரு முட்டையை எப்படி உடைக்க வேண்டும் என்பதை கற்கவே 7 நாட்கள் ஆனது. அந்த முட்டையோ இங்கயும் அங்கயுமாக விழுந்தது.” எனக் கூறி நினைவலைகளை பகிர்ந்திருந்தார்.
அதற்கு விக்கி கவுஷல், “சமயத்தில் அந்த முட்டையின் ஓடு பாத்திரத்திற்குள் விழுந்திருக்கும்.” என்று கிண்டலாக கூறியிருந்தார். இந்த வீடியோ சோனி டிவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு, “அமிதாப்ஜி நீங்கள் நன்றாக சமைப்பீர்கள் என நினைத்தோம். ஆனால் நீங்களும் விக்கியும் ஒரே மாதிரிதான் இருக்கிறீர்கள்” எனக் கேப்ஷனும் இடப்பட்டிருக்கிறது.