சினிமா

வாழ்க்கை வரலாற்று திரைப்படம்: மோடியாகிறார் விவேக் ஓபராய்!

வாழ்க்கை வரலாற்று திரைப்படம்: மோடியாகிறார் விவேக் ஓபராய்!

webteam

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறான 'பிஎம் நரேந்திர மோடி' திரைப்படத்தில் மோடியின் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடிக்க உள்ளார்

பாலிவுட்டில் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் அதிகம் எடுக்கப்படுகின்றன. கற்பனைக்கதையை உருவாக்கி எடுக்கப்படும் திரைப்படங்களை காட்டிலும் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் அதிக எதிர்பார்ப்பையும், முக்கிய பதிவாகவும் அமைகின்றன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி  ‘தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’  என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் சில சர்ச்சைகளை அது சந்தித்தது. 

இந்நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற பெயரில் இயக்குநர் ஓமங் குமார் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்கியவர் ஓமங் குமார். இதன்படி நரேந்திர மோடியின் திரைப்படத்தில் மோடியின் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 7ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாலிவுட் அனலிஸ்ட் ஆதர்ஷ், '' பிஎம் நரேந்திர மோடியின் திரைப்படம் தற்போது உறுதியாகியுள்ளது. ஓமங் குமார் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். நரேந்திர மோடியாக நடிகர் விவேக் ஓபராய் நடிக்க உள்ளார். சந்தீப் சிங் படத்தை தயாரிக்கிறார். ஜனவரி 15க்கும் மேல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

மோடியின் திரைப்படம் குறித்து பேசும்போதே நடிகர் விவேக் ஓபராய் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், குஜராத்திலும் இன்னும் சில மாநிலங்களிலும் படப்பிடிப்பு நடக்க உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.