நடிகர் விஜய் முதல் முறையாக தெலுங்கு திரைப்பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் மற்றும் தில் ராஜுவின் தயாரிப்பில் உருவான படம் வாரிசு. தெலுங்கில் வாரசுடு என்ற பெயரிலும் டப் செய்யப்பட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. தமிழில் ஜனவரி 11ம் தேதி வெளியான வாரிசு படம் தெலுங்கில் ஜனவரி 14ம் தேதி ரிலீசானது.
படத்தின் கதை, திரைக்கதை மற்றும் நீளம் உள்ளிட்டவற்றில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் படம் வெளியானது முதல் வசூல் ரீதியில் வாரிசு படம் பட்டையக்கிளப்பி வருவதாக தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் பொங்கல் ரிலீஸ் வின்னர் வாரிசுதான் என்று தயாரிப்பு நிர்வாகம் தரப்பிலேயே போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டது. இதுபோக உலகளவில் வாரிசு படம் இந்த ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் விஜய்யின் வாரிசு படம் இத்தனை பெரிய கலெக்ஷனையெல்லாம் பெற்றிருக்கவில்லை என சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறாததால் கலெக்ஷனையாவது கூடுதலாக காண்பிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இப்படியாக செய்ததாகவும் வாரிசு தயாரிப்பாளர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இப்படி இருக்கையில், வாரிசு படம் வசூலித்த மொத்த நிலவரம் உள்ளிட்ட பல விவரங்கள் குறித்த தகவல்களும் தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி விஜய்யின் வாரிசு படம் ஒட்டுமொத்தமாக 306 கோடியே 1 லட்சம் ரூபாய் வசூலித்திருக்கிறதாம். படத்தின் மொத்த பட்ஜெட்டே 260 கோடி ரூபாயாக இருக்கும் வேளையில் 295 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு பிசினஸ் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டுமே 147 கோடிக்கு வாரிசு படம் வசூலை குவித்திருப்பதாகவும், அதற்கடுத்தபடியாக கேரளாவில் 12 கோடி, கர்நாடகாவில் 15.75 கோடி, ஆந்திரா/தெலங்கானாவில் 25 கோடி, வட இந்தியாவில் மொத்தமாகவே 16.26 கோடி மற்றும் ஓவர்சீஸில் 90 கோடி ரூபாய் என வந்த கலெக்ஷனில்தான் மொத்த வசூல் 306.1 கோடி ரூபாய் என சொல்லப்பட்டிருக்கிறது.
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் வாரிசு படத்துக்கு 400 கோடி ரூபாய் வசூல் வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் 306 கோடி மட்டுமே வசூலாகியிருப்பதால் விநியோகஸ்தர்களுக்கு கிடைத்தது லாபமா நஷ்டமா என்ற கேள்வியே எழுந்திருக்கிறது.
அதன்படி, ஓவர் சீஸ் மற்றும் மாநில வாரியான கலெக்ஷன் விவரங்கள் என்னென்ன? எந்த அளவுக்கு லாபத்தையும் நஷ்டத்தையும் வாரிசு படம் அதன் விநியோகஸ்தர்களுக்கு கொடுத்திருக்கிறது என்ற விவரங்களை காணலாம்.
ஓவர் சீஸ்:
வாரிசு படத்தின் ஓவர் சீஸ் உரிமையை 35 கோடிக்கு வாங்கியிருந்தது Phars Films நிறுவனம். வாங்கிய தொகையை காட்டிலும் 45 கோடி அதிகமான வசூலை பெற்றுத் தந்ததால் வெளிவந்த தகவலின் படி விநியோகஸ்தருக்கு இதனால் 10 கோடி ரூபாய் லாபமே கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கர்நாடகா:
8 கோடி ரூபாய்க்கு திரையரங்க உரிமம் பெற்றிருந்த ஸ்வாகத் எண்டெர்பிரைசிஸ் நிறுவனம், விளம்பரங்களுக்கு கூடுதலாக 1 கோடியை செலவிட்டு 9 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது. ஆனால், கர்நாடகாவில் வாரிசு படம் வசூலித்தது என்னவோ வெறும் 15 கோடியே 75 லட்சம் ரூபாய் தானாம். இதனால் ஷேர் தொகை 8.80 கோடி நீங்கலாக எஞ்சிய 20 லட்சம் ரூபாய் விநியோகஸ்தருக்கு நஷ்டத்தையே கொடுக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. படம் வெளியாகி ஒரு மாதமாகி அடுத்தடுத்து புதுப்படங்களும் வெளியாகவிருக்கும் நிலையில் இதற்குமேலும் வாரிசு திரையில் ஓடுமா என்ற சந்தேகத்தையும் எழுப்பியிருக்கிறார்கள்.
கேரளா:
தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ராக்ஃபோர்ட் முருகானந்தம் வாரிசு படத்தின் கேரள ரைட்ஸை 6.50 கோடி ரூபாய்க்கு வாங்கி மலபார் மற்றும் பிற கேரளா என இரண்டாக பிரித்து 1.80 மற்றும் 5.70 கோடி என்ற முறையில் ஒரு கோடி ரூபாய் மார்ஜின் வைத்து விற்றிருக்கிறார். ஆனால் கேரளாவில் வசூலிக்கப்பட்ட மொத்த தொகையோ 12 கோடி ரூபாய். இதில் மலபாரில் மட்டும் 2 கோடியே 10 லட்சத்துக்குதான் வசூலாகியிருக்கிறது.
ஆனால் முதலீடு செய்யப்பட்டதோ 2 கோடி ரூபாய். இதில் 10 கோடி கூடுதலாக கிடைத்தாலும் போட்ட முதலுக்கு ஈடான தொகையா என்றால் இல்லையே என்றே கூற முடியும். அதேபோல பிற கேரள பகுதி விநியோகத்தை 5.70 கோடிக்கு வாங்கிய அகஸ்டின் என்பவர் ரூ.45 லட்சம் விளம்பரத்துக்கு செலவிட்டிருக்கிறார். இப்படி ரூ.6.15 கோடி செலவிட்டும் கேரளாவில் மலபார் நீங்கலாக வாரிசு படத்தால் இரண்டரை கோடி ரூபாய் நஷ்டமே ஏற்பட்டிருக்கிறதாம்.
ஆந்திரா/தெலங்கானா:
வாரசுடு என்ற பெயரில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெளியானது விஜய்யின் வாரிசு. தயாரிப்பாளர் தில் ராஜுவே சொந்தமாகவே ஆந்திரா தெலங்கானாவில் வெளியிட்டார். அதன்படி வாரசுடுவின் மொத்த கலெக்ஷனே வெறும் 25 கோடி ரூபாய்தான். இதில் லாபமாக வந்ததோ வெறும் 13 கோடிதான். இது விஜய்யின் முந்தைய படமான மாஸ்டர் ஆந்திரா தெலங்கானாவில் வசூலித்ததை விடவே குறைவான கலெக்ஷன் எனக் குறிப்பிடலாம்.
அதாவது மாஸ்டர் 15 கோடிக்கும், பீஸ்ட் 6.80 கோடிக்கும், பிகில் 10 கோடிக்கும் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோக, ஜனவரி 14ம் தேதி வாரசுடு வெளியான போது ரசிகர்கள் அலை அலையாக முட்டி மோதிக்கொண்டு தியேட்டருக்கு வந்ததாக பதிவுகளும் அப்போது பரவின. ஆனால் தெலுங்கு பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் படமான வாரசுடு ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலேயே பெரிதாக ரசிகர்களை கவரவில்லை என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
வட இந்தியா:
34 கோடி ரூபாய்க்கு வாரிசு படத்தின் இந்தி உரிமத்தை கோல்ட்மைன் டெலி ஃப்லிம்ஸ் வாங்கியிருந்தது. மொத்தமாக வந்த கலெக்ஷன் 16 கோடியே 26 லட்சம் என தகவல் வந்திருக்கிறது. இதில் ஷேர் 9 கோடியாக கிடைத்திருக்கும் பட்சத்தில் போட்ட முதலீட்டோடு ஒப்பிடும் போது 25 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக யூகிக்க முடிகிறது.
ஆனால், வட இந்தியாவின் எல்லா மொழிகளிலும் வாரிசு படத்தை டப் செய்து வெளியிடும் பட்சத்தில் அந்த 25 கோடியை சாட்டிலைட் வெளியீட்டில் கோல்ட்மைன் டெலி ஃப்லிம்ஸ் ஈடுகட்டும் என்றும் பேசப்படுகிறது. இருப்பினும் நடைமுறையில் இது எந்த அளவுக்கு சாத்தியமானது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
ALSO READ:
தமிழ்நாடு:
வாரிசு படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸின் லலித் குமார் 60 கோடி ரூபாய்க்கு வாங்கி முக்கிய நகரங்களை சில விநியோகஸ்தர்களிடம் விற்றிருக்கிறார். இப்படியாக தமிழ்நாட்டில் வாரிசு படம் வசூலித்ததோ மொத்தம் 147 கோடி ரூபாய். இதில் ஷேர் மட்டுமே 77 கோடி ரூபாய்.
இந்த 77 கோடியில் 17 கோடி லலித் குமாருக்கு வந்திருக்க வேண்டியது. ஆனால் விநியோகஸ்தர்களுக்கு பிரித்து கொடுத்ததால் அந்த தொகை அவர்கள் வசம் சென்றிருக்கிறது. அதன்படி திருச்சி, மதுரை, நெல்லை குமரி, சேலம் ஆகிய பகுதியைச் சேர்ந்த விநியோகஸ்தர்களுக்கே விற்றிருக்கிறார். இவர்களுக்கெல்லாம் வாரிசு படம் லாபத்தை கொடுத்ததா அல்லது நஷ்டத்தை கொடுத்ததா என்பதையும் அடுத்த பாகத்தில் விரிவாக பார்க்கலாம்.