leo vs jailer file image
சினிமா

16 நாளில் ரூ.525 கோடி..12 நாளில் ரூ.540 கோடி..ஜெயிலரை முந்துவதில் லியோவுக்கு என்ன சிக்கல்? ஓர் அலசல்

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் 12 நாட்களுக்கான வசூலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், இந்த வசூல் ரேஸில் வென்றது யார்?. ஜெயிலரின் மொத்த வசூலை லியோ முந்துமா? அதற்கான முகாந்திரங்கள் உள்ளனவா போன்ற விஷயங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

யுவபுருஷ்

பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் சிங்கிள் படமாக ரிலீஸான லியோ திரைப்படம் வசூல் வேட்டையாடி வருகிறது. முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 148 கோடி ரூபாயை படம் வசூலித்திருந்தது. அதனைத் தொடந்து 7 நாள் முடிவில் 461 கோடியை தாண்டியது. தற்போது படம் வெளியாகி 12 நாட்கள் ஆன நிலையில் மொத்தமாக 541 கோடி ரூபாயை இந்த படம் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இதற்கு முன்னதாக வெளியான ஜெயிலர் படத்தின் வசூலை முந்துமா என்று ரசிகர் படை கணக்கு போட்டு வருகிறது.

அதன்படி, ஜெயிலர் மற்றும் லியோ படத்தின் வசூல் ரேஸ் குறித்த விவரங்களை பார்க்கலாம். ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில் குமார், விநாயகன் என்று பெரிய நடிகர் பட்டாளமே களங்கிறங்கிய ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி வெளியானது. வழக்கமான ரஜினி படத்திற்கு கிடைத்த ஓபனிங் என்றாலும், தொடக்கத்தில் சற்று அமைதியாக இருந்து, அடுத்தடுத்த நாட்களில் வசூலில் சூடுபிடித்தது ஜெயிலர் படம்.

அதன்படி, முதல்நாள் வசூல் 100 கோடியை தாண்டிய நிலையில், ஒரு வாரத்தில் ரூ. 375 கோடியை வசூல் செய்தது. மேலும் 12 நாளில் சுமார் 510 கோடி ரூபாயை தொட்டதாக கூறப்படுகிறது. மேலும் 16 நாள் முடிவில் 525 கோடி ரூபாயை கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகார்ப்பூர்வமாக அறிவித்தது.

அதன்படி லியோவின் வசூல் வேட்டையை பார்த்தால், முதல் நாளில் 148 கோடி, ஒருவாரத்தில் 461 கோடி, 12 நாள் முடிவில் 540 கோடியை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஜெயிலர் படத்திற்கு கிடைத்த நல்ல விமர்சனங்களால், அடுத்தடுத்த நாட்களின் ஷோ சூடுபிடித்து, 604 கோடி ரூபாயை தொட்டது என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள்.

ஆனால், லியோவுக்கு கலவையான விமர்சனம் வருவதால், அடுத்தடுத்த நாட்களில் படம் நன்றாக ஓடினால் மட்டுமே ஜெயிலர் வசூலை லியோ மிஞ்சும் என்று பேசப்படுகிறது. ஜெயிலர் படத்தின் நிதானமான வசூலை லியோ படம் ஆக்ரோஷமான முறையில் சீக்கிரமே தொட்டுவிட்டாலும், ஒட்டுமொத்த வசூலை கடக்க இதே நிலையில் படம் ஓடினால் சுமார் 70 சதவீதமான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது.

லியோ படத்தை பொறுத்தவரை என்ன சிக்கல் என்றால் முதல் வாரம் அதிகப்படியான ஆடியன்ஸை உள்ளே இழுத்துவிட்டது. ஆனால், இரண்டாவது வாரத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது வாரத்தின் 5 நாட்களில் 80 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 10 ஆம் தேதி கார்த்தி நடிப்பில் ஜப்பான், எஸ்.ஜே.சூர்யா, லாரன்ஸ் நடிப்பில் ஜிகர்தண்டா-2 ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அதனால், இன்னும் 9 நாட்களில் எடுக்கும் வசூல் தான் ஜெயிலரை முந்துவதற்கான வாய்ப்பு லியோவிற்கு இருக்கிறது. வருகின்ற வார இறுதி நாட்களில் லியோ வசூலை பொறுத்து அதை செய்துவிடலாம்.