தனது கணவர் இர்ஃபான் கான மரணம் குறித்து அவரது மனைவி ஒரு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.
பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான் உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 54. 'ஜுராசிக் வேர்ல்ட்', 'தி ஜங்கிள் புக்', ‘தி அமேஸிங் ஸ்பைடர்மேன்’, 'லைஃப் ஆஃப் பை', ’ஸ்லம்டாக் மில்லியனர்’ ஆகிய ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் நியூரோ எண்டாக்ரின் டியூமர் எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே அவர் சிகிச்சைப் பலனின்றி காலமானதை அறிந்து பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இர்ஃபான் கானின் மனைவி சுதாபா சிக்தர் கடந்த இரண்டரை ஆண்டுகளில் தனது கணவரின் வாழ்க்கை குறித்து கடிதம் மூலம் சில தகவல்களைக் கூறியுள்ளார். அதில் தனது கணவர், நியூரோ எண்டோகிரைன் கட்டியை உறுதியுடன் எதிர்த்துப் போராடினார் என்று தெரிவித்துள்ளார். சுதாபா தனது இரு மகன்களான அயன் மற்றும் பாபிலின் சார்பாக ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். இர்ஃபானின் மரணத்தை ஒரு ‘தனிப்பட்ட இழப்பு’ என்று அவர்களால் பார்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
இர்ஃபான் கானின் சுதபா வெளியிட்டுள்ள அறிக்கையில், “முழு உலகமும் இதை ஒரு தனிப்பட்ட இழப்பாக எடுத்துக் கொள்ளும்போது நான் எப்படி இதை ஒரு குடும்ப அறிக்கையாக எழுத முடியும்? இந்த நேரத்தில் மில்லியன் கணக்கானவர்கள் எங்களுடன் துக்கப்படுகையில் நான் எப்படித் தனித்து உணர முடியும்? இது ஒரு இழப்பு அல்ல, அது ஒரு லாபம் என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். இது அவர் நமக்குக் கற்பித்த விஷயங்களின் ஆதாயமாகும். இப்போது நாம் இறுதியாக அதை உண்மையாகச் செயல்படுத்திப் பரிணமிக்கத் தொடங்குவோம்” எனக் கூறியுள்ள அவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனது கணவர் மருத்துவ ரீதியாகப் பட்ட துயரங்களைக் குறிப்பிட்டு அவருக்கு நல்ல சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.