மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அரசாங்கத்தின் மூலமாகவும் பல்வேறு தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலமாகவும் பல்வேறு தரப்பில் இருந்து மக்களுக்கு உதவிக்கரம் நீண்டு வருகிறது. அந்தவகையில் சின்னத்திரை மூலம் பிரபலமடைந்த நடிகர் பாலாவும் தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு நேரடியாக செய்து வருகின்றார்.
அப்படி புயல் ஓய்ந்த ஓரிரு தினத்திலேயே பாலா தன்னிடமிருந்த சேமிப்பு பணம் 2 லட்சத்தை எடுத்துவந்து பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்தவர்களுக்கு நேரடியாக கொடுத்திருந்தார். தொடர்ந்து அவர் தன்னாலான அனைத்து உதவிகளையும் மக்களுக்கு செய்துவருகிறார்.
இதுபற்றி நம்மிடையே அவர் பேசுகையில், “எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாட்களாகவே எனக்குள் உண்டு. முன்பெல்லாம் என்னிடத்தில் உதவி செய்ய பணம் இல்லை. உதாரணத்துக்கு தற்போது ஏற்பட்ட வெள்ளத்தினை போலவே போன வருடம் ஏற்பட்ட வெள்ளத்தின்போதும் எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் செய்யமுடியவில்லை. அப்படியிருக்க இந்த வெள்ளத்தின் போது பலரிடத்தில் இருந்து உதவி வேண்டி எனக்கு அழைப்பு வந்தது. இப்போது கொஞ்சம் பணம் இருப்பதால், தற்போது உதவி செய்து கொண்டிருக்கிறேன்.
நான் பிரம்மாண்டமான வாழ்க்கை எதுவும் வாழவில்லை.. 50 ரூபாய்க்கும் வாழத்தெரியும் 500 ரூபாய்க்கும் வாழத்தெரியும். எப்போதும் என்னிடத்தில் இருக்கிறதை வைத்து நான் செய்கிறேன். எனக்கு பெரிதாக எதிர்ப்பார்ப்பு எதுவும் இல்லை. இன்றைக்கான வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்கிறோமா? அவ்வளவுதான்.
என் அம்மாகூட ‘இவ்ளோ செய்கிறாயே’ என்று சில நேரம் சொல்வதுண்டு. அப்போது அம்மாவிடம் நான், ‘தப்பு எதுவும் செய்யலையேம்மா, நல்லதுதானே செய்றேன்’ என்று சொல்வேன். அதையேதான் சொல்கிறேன் இப்பவும்.
பிறருக்கு உதவிகரம் நீட்ட என் வீட்டிலும் ஒத்துழைப்பு தருகிறார்கள். பிறர் கூறுவதுபோல என் பின்புலத்தில் அரசியல்வாதிகள் யாரும் இல்லை. உதவி புரியும் விவகாரத்தில் எனக்கு யாரும் நன்கொடையும் தருவதில்லை. அரசியலுக்கு செல்லும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை. இனிவரும் காலங்களிலும் பிறருக்கு உதவுவேன்” என்று தெரிவித்துள்ளார்.