சினிமா

விமலின் 'கன்னிராசி' படத்திற்கு இடைக்கால தடை: நீதிமன்றம் உத்தரவு

sharpana

நடிகர் விமல் நடிப்பில் இன்று வெளியாக இருந்த 'கன்னி ராசி' திரைப்படத்திற்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

நடிகர் விமல் நடிப்பில் உருவான  'கன்னி ராசி’ படத்தை கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.  இந்த படத்தின் தமிழ்நாடு, கேரளா,கர்நாடகா மற்றும் புதுச்சேரி'க்கான விநியோக உரிமை 'மீடியா டைம்ஸ்' நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இதற்காக படத்தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு 17 லட்சம் ரூபாய்யை மீடியா டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீது வழங்கியுள்ளார். ஆனால், ஒப்பந்தத்தின் போது உறுதி அளித்ததை போல 2018 ஆம் ஆண்டுக்குள் படத்தை ஷமீன் இப்ராஹிம் வெளியிடவில்லை.

இந்நிலையில், 'கன்னி ராசி ' திரைப்படம் இன்று (27/11/2020) வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் விளம்பரம் வெளியிட்டிருந்தது.

 இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா,கர்நாடகா மற்றும் புதுச்சேரி'க்கான வினியோக உரிமைக்காக தன்னிடம் 17 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு வேறு நிறுவனம் மூலமாக படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், தன்னிடம் பெறப்பட்ட தொகைக்கு வட்டியுடன் சேர்த்து 21 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிடக்கோரி 'மீடியா டைம்ஸ்' நிறுவனம் சார்பில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 'கன்னி ராசி' திரைப்படம் வெளியாக இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனு தொடர்பாக டிசம்பர் 7ஆம் தேதிக்குள் பதிலளிக்க கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு உத்தரவிட்டார்.