jawan pt web
சினிமா

கொல்கத்தா அணியில் யோகிபாபுவா? ஜவான் விழாவில் நடந்த சுவாரஸ்யம்!

கடந்த மாதம் தோனி யோகிபாபுவை சென்னை அணியில் விளையாட அழைத்ததார். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் யோகிபாபுவை எடுப்பீர்களா என ஷாருக்கானிடம் நேற்று கேட்கப்பட்டது.

Angeshwar G

‘ராஜா ராணி’ படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் அட்லீ, பின்னர் தமிழிலேயே விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய 3 வெற்றி படங்களை தந்தார். இந்நிலையில் தற்போது இந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியா மணி, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு, சிறப்புத் தோற்றத்தில் தீபிகா படுகோனே, சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜவான்’ படம், இயக்குநர் அட்லீ மற்றும் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் அறிமுகப் படம் என்பதால் ஏராளமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள சாய்ராம் தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட யோகிபாபு பேசும்போது, தொகுப்பாளர் அவரிடம் இந்தியில் கேள்வியை தொடங்கினார். தொடர்ந்து பேசிய யோகிபாபு, “நான் முதல்ல என் மொழியில பேசுறேன்” என்று பேச ஆரம்பித்தார்.

பின், “முதலாவதாக இயக்குநர் அட்லிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் அட்லி ஜி இயக்கி இருக்கக்கூடிய தெறி, மெர்சல், பிகில் போன்ற அனைத்து படங்களிலும் எனக்கு வாய்ப்பளித்துள்ளார். நான் தெறி படத்திலேயே நடித்திருந்தேன். படத்தின் எடிட்டர் என் காட்சிகளை நீக்கிவிட்டார் (நகைச்சுவையாக குற்றம் சாட்டினார்)” என்றார்.

தொடர்ந்து ஷாருக்கானிடம், எல்.ஜி.எம். திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தோனி பேசியது குறித்து கேட்கப்பட்டது.

(அந்தப் பேட்டியில் தோனி, ‘ராயுடு ஓய்வு பெற்றுவிட்டார். சிஎஸ்கேவில் உங்களுக்கான இடம் உள்ளது. அணியின் நிர்வாகத்திடம்தான் பேசுகிறேன். உங்களை காயப்படுத்தும் வகையில் பந்து வீச்சாளர்கள் பந்தை வேகமாக வீசுவார்கள்” என்று தெரிவித்திருந்தார்)

ஷாருக்கானிடம், ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் யோகிபாபுவை எடுப்பீர்களா?’ என்று தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதில் அளிக்க, ஷாருக்கான் பெருவிரலை உயர்த்திக் காட்டினார். தொடர்ந்து அதகளத்துடன் இசைவெளியீட்டு விழா நடந்தது.

பின் விழாவில் பேசிய ஷாருக்கான், “ஜவான் திரைப்படம் எனக்கு நிறைய பாடம் புகட்டி உள்ளது. திரை உலகில் அற்புதமான படமாக இந்த படம் இடம்பெறும். அதற்காக இப்படத்தில் நிறைய உழைத்துள்ளேன்” என்றார்.

நடிகர் விஜய் சேதுபதி, “இயக்குநர் அட்லி இத்திரைப்படத்தில் என்னிடம் நிறைய வேலை வாங்கி விட்டார். இந்த திரைப்படம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும். அதேபோல யோகி பாபு திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்கு ஏற்றார்போல் டயலாக்குகளை தானாகவே உருவாக்குவார். அது அனைத்தும் அவரது சொந்த முயற்சியில் தான் இருக்கும்” என்றார்.

Vijay Sethupathi

இதையடுத்து இயக்குனர் அட்லி பேசுகையில், “ஜவான் படத்துக்காக கடந்த 4 வருடங்களாக கடினமாக உழைத்துள்ளோம். நான் இயக்கி இருக்கும் ஐந்தாவது படம் இது. எனக்கு பெரும் வெற்றியை தருமென நம்புகிறென். இந்தப் படத்தை இயக்குவதற்கு முக்கிய காரணம் தளபதி விஜய். வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி போல் வேற எந்த நடிகராலும் இதுபோன்று நடித்திருக்க இயலாது. அனிருத்துடன் பயணிப்பது பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் இருப்பது போல் எனக்கு தோன்றும்” என பேசினார்.