முதன்முதலாக எஸ்.பி.பி. தமிழ் திரைப் பாடலாகப் பாடியது `சாந்தி நிலையம்’ படத்துக்காக `இயற்கை எனும் இளைய கன்னி, ஏங்குகிறாள் துணையை எண்ணி’தான். ஆனால், திரைக்கு முதலில் வந்தது `அடிமைப் பெண்’ படப் பாடலான `ஆயிரம் நிலவே வா’!
பாடலைத் தவிர, நடிப்பிலும் அசத்தியவர். தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். `கேளடி கண்மணி’, `காதலன்’ இரண்டும், இன்றும் நினைவில் மறக்க முடியாதது.
எஸ்.பி.பி இதுவரை ஆறு முறை தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார். இவை, இந்தி, தமிழ், தெலுங்குப் பாடல்களைப் பாடியதற்காகப் பெற்ற விருதுகள். `சங்கராபரணம்’,` ரூத்ர வீணா’, `ஏக் துஜே கேலியே’, `மின்சாரக் கனவு’ ஆகிய படங்களும் அடங்கும்.
``ஏக் துஜே கேலியே’’ படம் ஹிட்டுக்குப் பிறகு மும்பையில் ஒரே நாளில் 19 பாடல்கள் பாடியவர், இதுதான் எல்லாப் பாடகர்களையும்விட எஸ்.பி.பி-யின் ஆல் டைம் சாதனை
சுத்தமான சைவ உணவுப் பழக்கம்; இவர் சாப்பிட எடுத்துக்கொள்கிற நேரம் ஐந்தே நிமிடங்கள். தயிர் சாதம்... இஷ்ட உணவு!
இதுவரை 42,000 பாடங்களுக்கு மேல் பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படகா, மராட்டி என 12 மொழிகளில் பாடியவர்.
எஸ்.பி.பி. தன் குரலைப் பாதுகாக்க, எந்தச் சிறப்புக் கவனமும் மேற்கொள்வது இல்லை. குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், இனிப்பு என எல்லாம் சாப்பிடுவார்.
எஸ்.பி.பி.-க்குப் பிடித்த பாடகர்கள் முகமது ரஃபி, யேசுதாஸ்; முகமது ரஃபியின் பாடல்களை விரும்பிக் கேட்பார்.
கிரிக்கெட் விளையாட்டின் வெறியர் எஸ்.பி.பி.; சச்சின் இவரது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, தன் கையெழுத்திட்ட பேட் பரிசு அளித்திருக்கிறார்.
`துடிக்கும் கரங்கள்’ படத்தில் ஆரம்பித்து 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். எல்லா மொழிப் படங்களும் இதில் அடக்கம்.
`முதல் மரியாதை’ படத்தில் சிவாஜிக்குப் பதிலாக நடித்திருக்க வேண்டியவர். பாரதிராஜா வற்புறுத்தியும் கடைசி நேரத்தில் எஸ்.பி.பி மறுத்துவிட்டார்.
எஸ்.பி.பி பிரமாதமாக வரைவார். மிக நன்றாகப் புல்லாங்குழல் வாசிப்பார். இரவுகளில் புல்லாங்குழல் இசை இவர் அறை வழி கசிவதை இன்றைக்கும் கேட்கலாம்.