சினிமா

ஈஸ்வரன் பட ட்ரெய்லரை நீக்க விலங்குகள் நல வாரியம் அதிரடி உத்தரவு

ஈஸ்வரன் பட ட்ரெய்லரை நீக்க விலங்குகள் நல வாரியம் அதிரடி உத்தரவு

webteam

சிம்பு நடித்து வரும் ஈஸ்வரன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் போஸ்டரை உடனடியாக சமூகவலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என இந்திய விலங்கு நலவாரியம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ஈஸ்வரன். இப்படத்திற்காக நடிகர் சிலம்பரசன் கடினமான உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைத்துள்ளார். அது  தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

அதனைத் தொடர்ந்து ஈஸ்வரன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அந்தப் போஸ்டரானது சிலம்பரசன்
தனது கையில் பாம்பு ஒன்றை வைத்திருப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தப் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில், நடிகர் சிலம்பரசன் பாம்பு ஒன்றை கையால் பிடித்து சாக்குப்பைக்குள் வைப்பது போன்ற வீடியோவும் வெளியாகி வைரலானது.

இதனைப்பார்த்த சமூக ஆர்வலர்கள், சிலம்பரசன் பாம்பை கொடுமைப்படுத்தியதாகவும், படக்குழு வன உயிரின
சட்டத்தை மீறியுள்ளதாகவும் புகார் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்த அப்படத்தின் இயக்குநர்
சுசீந்திரன் படப்பிடிப்பில் உபயோகிக்கப்பட்ட பாம்பானது பிளாஸ்டிக் பாம்பு என்றும் பாம்பு கிராபிக்ஸ் முறையில் நிஜ பாம்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் ஈஸ்வரன் படப்பிடிப்பில் பிளாஸ்டிக் பாம்பை பயன்படுத்துவதற்கு விலங்குநலவாரியத்திடம் அனுமதி பெறாததால் சமூக வலைதளங்களில் உலாவும் ஈஸ்வரன் படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லரை உடனடியாக இருந்து நீக்க வேண்டும் என அவ்வமைப்பு ஈஸ்வரன் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது “ ஈஸ்வரன் படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் அண்மையில்
சமூக வலைதளங்களில் வெளியானது. படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லரில் நாகப்பாம்பை, பிளாஸ்டிக் பாம்பாக வடிவமைத்து, அதனை நிஜப்பாம்பாகக் காட்சிப்படுத்த கிராபிக்ஸ் செயல்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பிளாஸ்டிக் பாம்பைப் பயன்படுத்துவதற்கு எங்கள் அமைப்பிடம் இருந்து எந்த அனுமதிச் சான்றிதழையும் படக்குழு பெறவில்லை. ஆகையால் தற்போது இணையத்தில் உலாவும் ஈஸ்வரன் படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லரை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மாதவ் மீடியா ப்ரைவேட் லிம்ட். கார்ப்பரேஷன் உடனடியாக நீக்க வேண்டும்.

அத்துடன் அமைப்பின் அனுமதி இல்லாமல் கிராபிக்ஸ் முறையில் பாம்பை பயன்படுத்தியதற்கான விளக்கத்தை 7 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.