இளையராஜா பயன்படுத்திவந்த ரெக்கார்டிங் தியேட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதால் அவர் அதிர்ச்சியில் உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை வெளியேற்றியதை எதிர்த்தும் தியானம் செய்ய ஒரு நாள் அனுமதிக்கோரியும் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக நடைபெற்றது.
அப்போது பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் “எங்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற்றால் இளையராஜாவையும் அவரது உதவியாளர்களையும் ஸ்டூடியோவிற்குள் அனுமதிக்க தயார்” என தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் அவர் இசையமைத்த பகுதியின் இடத்தை உரிமைகோரக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற இளையராஜா தனது வழக்கை வாபஸ் பெற்றார்.
தொடர்ந்து பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்ல இளையராஜாவுக்கு ஒரு நாள் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நேரத்தை பொருத்தவரை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்குள் அதாவது அந்த 7 மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் அதே நேரத்தில் அவர் தியானம் மேற்கொள்வது குறித்தும் முடிவெடுத்துக்கொள்ளலாம் எனவும் நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.
நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து இளையராஜாவுக்கு சொந்தமான இசைக்கருவிகள் எடுத்துச்செல்ல இளையராஜா தரப்பு வழக்கறிஞர்களும், பிரசாத் ஸ்டூடியோ தரப்பு வழக்கறிஞர்களும் காலை 9.30 மணியளவில் பிரசாத் ஸ்டூடியோவிற்கு சென்றனர். ஆனால் இளையராஜா ஸ்டூடியோவிற்கு வராத நிலையில், அவர் பயன்படுத்திய இசைக்கருவிகளைக் கொண்டுசெல்ல இரண்டு வாகனங்கள் மட்டும் அங்கு வந்திருந்தது.
இதுகுறித்து அங்கு வந்துள்ள இளையராஜா தரப்பு வழக்கறிஞர்கள் கூறும்போது, இளையராஜா பயன்படுத்திவந்த ரெக்கார்டிங் தியேட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் அவர் பயன்படுத்திவந்த இசைக்கருவிகள் உள்ளே இருக்கிறதா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறியிருக்கின்றனர். இந்த தகவலறிந்த இளையராஜா மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி இருப்பதாகவும் கூறினர். எனவே அவர் இன்று பிரசாத் ஸ்டூடியோவிற்கு வருகை தருவாரா என்பது குறித்து தெரியவில்லை என்றும் கூறினர்.
இதுகுறித்து இருதரப்பு வழக்கறிஞர்களும் விசாரித்துவருகின்றனர். மேலும் இளையராஜா அங்கு வருவாரா அல்லது அவர் தரப்பிலிருந்து அறிக்கை ஏதேனும் வருமா என்பது குறித்தும் பின்னர் தெரிவிக்கப்படும் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.