பாடலுக்கு இசை பெரிதா, மொழி பெரிதா என்ற சர்ச்சையை கவிஞர் வைரமுத்து கிளப்ப, அது சமூகவலைதளங்களில் தீயாய் பற்றிக் கொண்டது. இரண்டு தரப்பிற்கும் நிறைய ஆதரவு கருத்துக்கள் இருந்தாலும், இளையராஜாவின் சமீபத்திய நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்த பலர் அவர்மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்துக்கொண்டும், நீண்டநெடிய பதிவுகளையும், வீடியோ பதிவுகளையும் வெளியிட்டு சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து கங்கை அமரன், சீனு ராமசாமி, சினேகன், ஜேம்ஸ் வசந்தன் முதலியவர்கள் கருத்து தெரிவித்த நிலையில், வைரமுத்து மீண்டும் சிலபதிவுகளை பதிவிட்டு தொடர்ந்து இந்த டாபிக்கை பேசுபொருளாக மாற்றினார். இசை பெரிதா? மொழி பெரிதா? என்றிருந்த பிரச்னை நீயா? நானா? என்ற நிலைக்கே சென்றது.
இந்நிலையில் தன்னைப்பற்றி நிறைய கருத்துகள் பகிரப்பட்டுவரும் நிலையில், அமைதியாக இருந்த இளையராஜா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியுள்ளார்.
தன்னைப்பற்றிய நிறைய சர்ச்சையான கருத்துகள் பேசப்பட்டும், வீடியோவாக வெளியிடப்பட்டும் நிறைய விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், அதிலெல்லாம் நான் கவனம் செலுத்துவதில்லை என்று இளையராஜா வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார்.
வீடியோவில் பேசியிருக்கும் இளையராஜா, ”எல்லோருக்கும் வணக்கம். என்னை பற்றி ஏதோ ஒருவகையில் நிறைய வீடியோக்கள் வந்துகொண்டிருக்கிறது என வேண்டியவர்களின் மூலம் நான் கேள்விப்பட்டேன். ஆனால் நான் அதைப் பற்றியெல்லாம் கவனம் செலுத்துவதில்லை, ஏனெனில் மற்றவர்களை கவனிப்பது என்னுடைய வேலை இல்லை. என்னுடைய வேலையை கவனிப்பது மட்டும் தான் என்னுடைய வேலை. நான் என்னுடைய வழியில் தெளிவாக சென்றுகொண்டிருக்கிறேன்.
நீங்கள் என்னை பற்றி பேசிக்கொண்டிருக்கும் வேளையில், கடந்த ஒரு மாதத்தில் நான் ஒரு முழு சிம்பொனியையே எழுதிமுடித்துவிட்டேன். சினிமா பாடல்களுக்கும் இசையமைத்துவிட்டு, இடையிடையே விழாக்களுக்கும் சென்றுவிட்டு மீதமிருக்கும் நேரத்தில் வெறும் 35 நாட்களில் ஒரு முழு சிம்பொனியை எழுதிமுடித்துள்ளேன். சினிமா இசை, பின்னணி இசை எதுவும் இல்லாமல் இசைப்பது தான் சிம்பொனி, அப்படியான இசையை எழுதிமுடித்துவிட்டேன் என்ற நல்ல செய்தியை ரசிகர்களாகிய உங்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன்” என்று பேசியுள்ளார்.