சினிமா

கோயில்கள், தொண்டு நிறுவனங்களுக்கு இலவசம்: இளையராஜா பாடல் பாட ராயல்டி எவ்வளவு?

கோயில்கள், தொண்டு நிறுவனங்களுக்கு இலவசம்: இளையராஜா பாடல் பாட ராயல்டி எவ்வளவு?

webteam

இளையராஜா பாடல்களை பாடுவதற்கான ராயல்டி தொகை எவ்வளவு என்பது குறித்த விவரம் இப்போது வெளியாகியுள்ளது. 

கச்சேரிகளில் அனுமதி இல்லாமல் தனது பாடல்களை பாட இசையமைப்பாளர் இளையராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளிநாடுகளில் நடந்த கச்சேரிகளில் தனது இசையில் உருவான பாடல்களை பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸூம் அனுப்பினார்.

இதனால் இளையராஜாவின் பாடல்களை அவர் பாடவில்லை. ஆனாலும் ஐதராபாத்தில் சமீபத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அளித்த பேட்டியில் கச்சேரிகளில் மீண்டும் இளையராஜா பாடல்களை பாடுவேன் என்றும் இதற்காக அவர் சட்ட நடவடிக்கைகள் எடுத்தாலும் சந்திப்பேன் என்றும் கூறினார்.

இந்த நிலையில்தான் இப்போது மீண்டும் தனது பாடல்களை அனுமதி இல்லாமல் பின்னணி பாடகர்கள் பாடக் கூடாது என்று கண்டித்துள்ளார். மீறி பாடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். 

இளையராஜா பாடல்களுக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விவரம் வெளியாகி உள்ளது. வெளிநாட்டு கச்சேரிகளில் இளையராஜா பாடல்களை பாட, அதாவது எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிகரன், சங்கர் மகாதேவன், சித்ரா உள்ளிட்ட ‘ஏ’ பிரிவினருக்கு வருடத்துக்கு ரூ.20 லட்சம் கட்டணமும் ‘பி’ பிரிவினருக்கு ரூ.15 லட்சமும் ‘சி’ பிரிவினருக்கு ரூ.10 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறிய பாடகர்கள் பி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் மேடை கச்சேரிகளில் பாடுபவர்கள் சி பிரிவு என்றும் வகைப்படுத்தி உள்ளனர்.

இந்தியாவில் மைதானங்களில் நடக்கும் கச்சேரிகளில் இளையராஜா பாடல்களை பாடுவதற்கு ரூ.75 ஆயிரமும் தனியார் நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் பாட ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் ஓட்டல்களில் பாட ரூ.30 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோயில்கள், திருமண விழாக்கள், தொண்டு நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு ராயல்டி வசூலிக்கப்படுவதில்லை.  ராயல்டியை வசூல் செய்யும் உரிமையை இசைக்கலைஞர்கள் சங்கத்துக்கு இளையராஜா வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.