சினிமா

எஸ்.பி.பிக்கு இளையராஜா நோட்டீஸ்

Rasus

மேடைக் கச்சேரிகளில் தனது பாடல்களை அவரது அனுமதி பெறாமல் பாடுவதற்கு இளையராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக தனது குழுவுடன் சென்றுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஃபேஸ்புக் பக்கத்தில் இதைத் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு இளையராஜாவின் நோட்டீஸ் கிடைத்ததாகக் கூறியுள்ள எஸ்.பி.பி, இதேபோல பாடகி சித்ரா மற்றும் தனது மகன் சரண் ஆகியோருக்கும் நோட்டீஸ் வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இனி வரும் கச்சேரிகளில் இளையராஜா பாடல்களை பாட இயலாது என்பதற்கான காரணத்தை ரசிகர்கள் அறிந்து கொள்வதற்காக இதைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ள அவர், அதிர்ஷ்டவசமாக மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியிருப்பதால், அந்தப் பாடல்களை கச்சேரிகளில் பாடப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியாவில் பலமுறை இசை நிகழ்ச்சிகளில் இளையராஜாவின் பாடல்களை பாடி வந்திருப்பதாகக் கூறியுள்ள எஸ்.பி.பி., அப்போதெல்லாம் இதுபோன்ற தடை ஏதும் வந்ததில்லை என்றும் பதிவிட்டுள்ளார். எஸ்.பி.பி.யின் இந்தப் பதிவுக்கு சிலர் பதில் கருத்துகளைப் பதிவிடத் தொடங்கிய நிலையில், நண்பர் இளையராஜா இதை முன்கூட்டியே தன்னிடம் தெரிவித்திருக்கலாம் என்றும், இப்போது வழக்கு வந்துவிட்டதால் சட்டப்படி சந்திக்க வேண்டியிருப்பதாகவும் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். எனினும், இளையராஜாவுக்கு சங்கடம் தரும் வகையில் கருத்துகளை வெளியிட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.