உலகின் கவனத்துக்குரிய ஊடகங்களில் ஒன்றான 'பிபிசி'-யின் ’2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண்கள்’ பட்டியலில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ’தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ குழுவைச் சேர்ந்த கானா பாடகர் இசைவாணி இடம் பிடித்தார். அவருக்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ‘இசைஞானி’ இளையராஜா நேரில் அழைத்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்திருகிறார்.
சமூகத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கும் பெண்களை கெளரவிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் பிபிசி சிறந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த வருடம் இடம் பிடித்த 100 பெண்களில் 4 பேர் இந்திய பெண்கள். அதில், இசைவாணி ஒரே தமிழகப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் அறிவாற்றல், படைப்பாற்றல், தலைமைத்துவம், அடையாளம் ஆகிய பிரிவுகளில், படைப்பாற்றல் பிரிவில் இடம்பிடித்த 21 பெண்களில் இசைவாணி மட்டுமே இந்தியர். பருவநிலை செயற்பாட்டாளர் ரிதிமா பாண்டே, தடகள வீராங்கனை மானஷி ஜோஷி, வயதான போராளி பில்கிஸ் பானோ என மற்ற மூவரும் வெவ்வேறு துறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், இசைஞானி இளையராஜா இசைவாணியை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது.