’நேட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சத்யராஜ், நாசர், காமெடி நடிகர் கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர், மற்றும் படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி யாஷிகா எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ் மிக காமெடியாக தனது பேச்சை தொடங்கினார். பழைய காலத்தில் தொடங்கி இன்றைய படப்பிடிப்பு அனுபவம் வரை நீண்டது அவரது பேச்சு. அவர், “இந்தப் படம் பொலிட்டிகல் த்ரிலர் படம். ரொம்ப நாள் கழிச்சு இதுல நான் மேக் அப் போடாம நடிச்சிருக்கேன். லேசா ஐ ப்ரோ கூட நடிச்சிருக்கேன். ஷங்கரோட ‘நண்பன்’ படத்துல நடிச்சப்ப அவர், ‘நீங்களே தெலுங்கு டப்பிங் பேசிடுங்கனு’ சொன்னார். சரிங்க சார்னு டப்பிங் தியேட்டருக்குப் போனேன். நீளமான வசனம் தந்தாங்க. தெலுங்குல கொடுத்த வசனத்தை எல்லாம் தமிழ்ல எழுதிக்கிட்டேன். ஸ்கிரீன்ல என்ன காட்சி வருதுன்னே பார்க்கல. கையில ஸ்கிரிப்டை புடிச்சிக்கிட்டு அப்படியே கடகடகனு அடிச்சேன். ஃபர்ஸ்ட் டேக்கே 100 பர்சண்ட் சக்சஸ். உதட்டசைவு அச்சுஅசலா இருந்தது. டப்பிங் முடிச்சுட்டு வெளிய வந்தேன். ‘சார், நீங்க பேசுனதே இல்ல சார்..திரும்ப இன்னொரு டேக் போயிடலாம்னு’ சொன்னார். ஏன் கரெக்ட்டா செட் ஆச்சேனு கேட்டேன். செட் ஆச்சு சார்.
ஆனா ஸ்லாங் சரியா செட் ஆகலனு சொன்னார். அடுத்து போய் பேசினேன். அத கேட்டுட்டு அவர் ‘இது அதவிட மோசமா இருக்கு சார்’னு சொன்னார். இப்படியே பத்து டேக் பேசினேன். கடையில சரிபட்டு வராதுனு உடனே ஷங்கர்கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன். இந்த ‘நோட்டா’வுல ஹீரோவுக்கு 4 பக்கத்துக்கு டயலாக். இவருக்குதான் தமிழே தெரியாதே எப்படிடா சமாளிக்க போறாருனு நெனைச்சேன். வந்து கரெக்ட்டா பேசிட்டார். ரியலி கிரேட் விஜய். நாம ஒரு பக்க டயலாக்கை இடைவெளி விட்டுவிட்டு பேசினா நாம என்ன பேசினோம்னே நமக்கே மறந்து போயிடும். எனக்குத் தெரிஞ்சு டயலாக் இடைவெளிவிட்டு விட்டு பேசுற ஒரே நடிகர் அமிதாப் பச்சன்தான். அவருக்குதான் செட் ஆகும். அது ஏதோ அவருக்கு ஒரு ஸ்டைலாகவே மாறிவிட்டது” என்றவர் அப்படியே ‘பாகுபலி’ கதைக்கு வந்தார்.
“என் சினிமா வாழ்க்கையில் இந்த 41 வருஷத்துல ஒரு சின்ன மேக் அப் கூட இல்லாம நடிச்ச முதல் படம் இதுதான். மணிரத்னத்தின் முதல் படமான ‘பகல்நிலவு’இல் விக் இல்லாம நடிச்சிருக்கேன். நமக்கு கல்தோன்றி மண்தோன்றா காலத்துலயே மண்டையில் ஒண்ணும் இல்ல. எனக்கு 30 வயசுலயே அந்தப் படத்துல பேரன் பேத்தி எல்லாம் இருக்கும். ‘பாகுபலி’ படத்துல கீழ தாடி, மேல கிரீடம், முகத்துல மேக் அப், அது போதாதக் குறைக்கு ‘சார் இது பத்து நாள் கழிச்சு வர்ற வார் சீக்வென்ஸ்’ அதனால முகத்துல புழுதி எல்லாம் படிச்சிருக்கும்னு லேசா மூஞ்சில புழுதியை தடவி விட்டுவிடுவாங்க. அதனால் முதத்துல கை வைச்சு தடவாம நடிக்கணும். அப்படி கைவச்ச மேக் அப் அழுஞ்சிடும். அந்த மாதிரி ஒரு ஞான நிலையில் இருந்துதான் அந்தப் படத்தில் நடித்தேன்” என்று கலகலப்பாக பேசினார்.
அடுத்து வந்த யாஷிகா, “இந்தக் குழுவுடன் இணைந்து வேலை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது. இந்த மாதிரியான கதைக்குதான் இளைய தலைமுறை நடிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தின் கதை மிகவும் நம்பிக்கைக்குரிய கதை” என்றார்.
பின்னால் வந்த விஜய் தேவரகொண்டா, “முதன்முறை இங்கே விழாவில் கலந்து கொண்ட போது எனக்கு தமிழ் தெரியாது. மேடையில் உட்கார்ந்து கொண்டு மனதில் திருக்குறளை ஒப்பித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் இப்போது தமிழில் பேச தொடங்கி இருக்கிறேன். எங்கள் வேலையை சிறப்பாக செய்திருக்கிறோம். படத்தின் டீசர் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இனிமேல் பேச ஒன்றுமில்லை. தியேட்டரில் சந்திப்போம். மரண வெய்ட்டிங்” என்றார்.