மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும், நடிகர் ரஜினிகாந்தும் தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டும் என நடிகர் விஷால் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் அமைதி காத்த கமல், தங்கள் கைகள் கரை படிந்து விடக்கூடாது என்றும் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் தங்களது இலக்கு என்றும் ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டார். பின்னர் பேசிய கமல்ஹாசன், “ ரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புகிறேன், ஆனால் ஆதரவு என்பது கேட்டு பெறவேண்டிய விஷயம் அல்ல. அவர்களே கொடுக்கவேண்டும். இப்போது வரை தனித்து போட்டியிடுவதே மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவாக உள்ளது” என்று தெரிவித்தார்.
இந்தச்சூழலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு நன்றி தெரிவித்த கமல், “நன்றி என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே நாளை நமதே” என்று சூசகமாக ஆதரவு கோரினார்.
தொடர்ந்து ரஜினிக்கு கமல் கூட்டணி அழைப்பு கொடுத்துவரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும், நடிகர் ரஜினிகாந்தும் தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டும் என நடிகர் விஷால் விருப்பம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் சேர்ந்து வர வேண்டும். இது நடிகர் சங்க விழாவுக்கோ, எந்த நடிகரின் வரவேற்புக்கோ, வேறு எதற்குமே அல்ல. அவர்கள் வரவுள்ள மக்களவை தேர்தலுக்கு சேர்ந்து வர வேண்டும். அது மாற்றத்தை கொண்டுவரும் நடவடிக்கையாக அமையும்'' எனவும் விஷால் கூறியுள்ளார்.