ஒரு நடிகனாக ஆக வேண்டும் என்று கமல்ஹாசன் அலுவலகத்தின் முன்பு பல நாள்கள் காத்து கொண்டு நின்றிருக்கிறேன் என்று இயக்குநர் கெளதம் மேனன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
“இளையராஜா, கமல்ஹாசனுடன் எல்லாம் சேர்ந்து வேலை செய்வேன் என்று நினைச்சதே இல்லை. அது ஒரு கனவு மாதிரிதான். ‘குருதிப்புனல்’ வெளியான போதே கமலுடன் இணைந்து வேலை செய்ய முயற்சி செய்திருக்கிறேன். பல நாள் அவர் அலுவலகம் முன் காத்து நின்றிருக்கிறேன். அப்புறம் ஒரு நடிகராக முயற்சி செய்வோம் என்று நினைத்து, போட்டோ ஷூட் செய்து அதை ஒரு கவரில் போட்டு ’நான் நடிக்க விரும்புகிறேன்’ என்று எழுதி கமல் அலுவலகத்தில் கொடுத்திருக்கிறேன்.
ஆனால் ஒருநாள் கூட அவரைச் சந்தித்தது இல்லை. அவர் அலுவலகத்தில் வருவதையும் போவதையும் வெளியில் நின்று பார்த்திருக்கிறேன். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. இந்தக் காலகட்டம் முடிந்து நான் ‘காக்க காக்க’ எடுத்து முடித்த பிறகு அவரது அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. போய் பார்த்து கதை சொன்னேன். நான் நினைத்துகூட பார்த்ததில்லை. அவரிடம் கதை சொல்வேன் என்பதை. நான் நம்பவே இல்லை. எப்படியாவது கொடுக்கப்பட்ட பத்து நிமிடத்திற்குள் கதை சொல்லி அவரை சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன்.
அந்தக் கதையை சொன்ன பிறகும் படம் ஆரம்பிக்க ஆறு ஏழு மாதங்கள் ஆனது. முதல் ஷாட்டை இன்னும் மறக்க முடியாது. பெரிய கேட்டை அவர்த் திறந்து வருவதை போன்ற காட்சியைதான் எடுத்தோம். அப்படிதான் இருக்கணும்னுதான் எடுத்தோம். அவர் என் வாழ்க்கையின் உள்ளே வந்துவிட்டார் என்பதை அர்த்தப்படுத்தவே அந்தக் காட்சியை வைத்தோம். அது ஒரு அழகான தருணம்” என்று கூறியுள்ளார்.