‘இனி இசை கச்சேரிகளிலும் பாட மாட்டேன்’ என்று பிரபல பின்னணி இசைப் பாடகி, இசைக்குயில் எஸ்.ஜானகி சொன்னார்.
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி (79) சினிமாவில் பாடுவதில்லை என்று கடந்த சில வருடங்களுக்கு முன் அறிவித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட 17 மொழிகளில் சுமார் 48 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள அவரின் குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் அடிமை.
’அன்னக்கிளி’ படத்தில் ’அன்னக்கிளி உன்னத்தேடுதே’ , ’16 வயதினிலே’ படத்தில் பாடிய ’செந்துாரப்பூவே’, ’கடலோர கவிதைகள்’ படத்தில் பாடிய, ’அடி ஆத்தாடி’, ’சங்கமம்’ படத்தில் ’மார்கழி திங்களல்லவா’ உட்பட ஏராளமான மனதை மயக்கும் பாடல்களை பாடி இருக்கிறார். குரலை மாற்றி குழந்தைகளுக்காகவும் பாடுவதில் வல்லவர் ஜானகி.
இவர் ’ஜானகி சாரிடபிள் டிரஸ்ட்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி திரட்டும் விதமாக, இசை நிகழ்ச்சி ஒன்றை நேற்று நடத்தினார். மைசூரில் நடந்த இசை நிகழ்ச்சியை, மன்னர் பரம்பரையை சேர்ந்த பிரமோதா தேவி துவக்கி வைத்தார். இதில் சுமார் 20 ஆயிரம் ரசிகர்கள் கலந்துகொண்டனர்.நடிகைகள் ஜெயந்தி, பாரதி விஷ்ணுவர்தன், பாடகிகள், ஹரிணி, சின்மயி, ராஜேஷ் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய ஜானகி, ’1957-ல் பாடத் தொடங்கினேன்.ஏராளமான பாடல்களை பாடியுள்ளேன். இதுதான் என் கடைசி இசை நிகழ்ச்சி. இனி, மேடையில், இசைக்கச்சேரிகளில் பாடப்போவதில்லை’ என்று சொன்னார்.