சினிமா

பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிவதை எதிர்ப்பதா! உத்தரகாண்ட் முதல்வருக்கு சத்யராஜ் மகள் கண்டனம்

பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிவதை எதிர்ப்பதா! உத்தரகாண்ட் முதல்வருக்கு சத்யராஜ் மகள் கண்டனம்

sharpana

பெண்கள் ஜீன்ஸ் அணிவது பற்றி உத்தராகண்ட் மாநில முதல்வர் திரத் சிங் ராவத் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருந்ததற்கு நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

பாஜக ஆளும் உத்தராகண்டின் முதல்வர் திரத் சிங் ராவத் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது “ஒருமுறை நான் விமானத்தில் பயணித்தபோது, குழந்தையுடன் இருந்த பெண் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். என்ன மாதிரியான நடத்தை இது?. கிழிந்த ஜீன்ஸ் அணிவது சமூக முறிவுக்கு வழிவகுக்கிறது. இது பெற்றோர்களால் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட ’மோசமான முன்மாதிரி.

பெண்கள் ஜீன்ஸ் அணிந்து முழங்கால்களைக் காட்டுகிறார்கள். இது நல்லதா? இவை அனைத்தும், மேற்கத்தியமயமாக்கலின் ஒரு பைத்தியக்காரத்தனம். இதுபோன்ற பெண்கள் சமூகத்திற்கு என்ன செய்தியை சொல்ல விரும்புகிறார்கள்” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவரின் இந்த சர்ச்சை பேச்சை கண்டித்து தாங்கள் ஜீன்ஸ் அணிந்த புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக எதிர்வினையாற்றினார்கள்.

இந்நிலையில், சமூக செயற்பாட்டாளரும் ஊட்டச்சத்து நிபுணரும் மகிழ்மதி இயக்கத்தின் தலைவருமான திவ்யா சத்யராஜ், உத்தராகண்ட் மாநில முதல்வரின் சர்ச்சைக் கருத்து எதிராக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் “எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷார்ட்ஸ் மற்றும் ஜீன்ஸ் போன்ற படங்கள் பதிவிடுவதை எதிர்த்து பலர் எனக்கு அறிவுரைக் கூறினர். ஒரு பெண் அரசியல்வாதியாய் காட்டன் புடவையில்தான் வெளியில் தோன்றவேண்டும் என்றும் கூறினார்கள். உத்தரகாண்ட் முதல்வர் திரத் சிங் ராவத்தின் பேச்சை ஒரு பெரியாரிஸ்டாக நான் கடுமையாக எதிர்க்கிறேன்.

தனக்கு பிடித்த உடையை அணிய ஒவ்வொரு பெண்ணுக்கும் முழு சுதந்திரம் உண்டு. கிழிந்த ஜீன்ஸ் அணிவதில் நான் பெருமைப்படுகிறேன். நாங்கள் எதை உடுத்தவேண்டும் என்று கூறுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதோடு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கிழிந்த ஜீன்ஸில் புகைப்படம் வெளியிட்டு உத்தராகண்ட் முதல்வரின் பேச்சை கண்டித்திருக்கிறார்.