சினிமா

‘மின்சார கண்ணா’ கதைத் திருட்டுக்காக சர்வதேச வழக்குப் போடுவேன் - தயாரிப்பாளர்

‘மின்சார கண்ணா’ கதைத் திருட்டுக்காக சர்வதேச வழக்குப் போடுவேன் - தயாரிப்பாளர்

webteam

‘மின்சார கண்ணா’ கதை திருட்டு குறித்து தயாரிப்பாளர் தேனப்பன் சர்வதே வழக்கறிஞரை வைத்து வழக்குத் தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

உலகமே எதிர்பார்த்து காத்திருந்த 92-வது ஆஸ்கர் விழா, கடந்த வாரம் நடந்தது. இந்த விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை கொரிய மொழியில் வெளியான ‘Parasite’ திரைப்படம் வென்றது. அத்துடன், சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம் என மொத்தம் 4 விருதுகளை பாராசைட் திரைப்படம் தட்டிச் சென்றது. கேன்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வாங்கி குவித்த ‘பாராசைட்’ திரைப்படம் எதிர்பார்த்தபடியே ஆஸ்கர் விருதுகளையும் அள்ளிக் குவித்தது.

இந்தச் செய்தி வெளியாகிக் கொண்டிருந்தபோது விஜய் ரசிகர்கள் அவரது நடிப்பில் வெளியான ‘மின்சார கண்ணா’ படத்தின் கதையையும் ‘பாராசைட்’ திரைப்படத்தின் கதையும் ஒன்று எனக்கூறி தகவல் பகிர்ந்து வந்தனர். தமிழ்ப் படத்தை தழுவி, ஒரு உலகத்திரைப்படமே வந்துவிட்டது என்றும் கருத்திட்டு வந்தனர். ஆகவே இந்தச் செய்தி வைரலானது. விஜய் நடித்த ‘மின்சார கண்ணா’ படத்தினை கே.ஆர் கங்காதரன் தயாரித்திருந்தார்.

ஆகவே இந்த விவகாரம் குறித்து தேனப்பன் இப்போது கருத்து தெரிவித்துள்ளார். ‘பாராசைட்’ படத்தின் மீது உரிமைகோரி வழக்குத் தொடர்வது குறித்து சர்வதேச வழக்கறிஞருடன் ஆலோசித்து வருவதாகக் கூறியுள்ளார். ‘மின்சார கண்ணா’ படம் சம்பந்தமான உரிமைகள் அனைத்தையும் கே.ஆர் கங்காதரனிடமிருந்து வாங்கி தான் வைத்துள்ளதாக பி.எல்.தேனப்பன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் கதையாசிரியரான எம்ஏ கென்னடி இறப்பதற்கு முன்பே உரிமைகளை தயாரிப்பாளருக்கு விற்றுவிட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய தேனப்பன், “கங்காதரன் தயாரித்த 20க்கும் மேற்பட்ட தமிழ் படங்களின் உரிமைகளை நான் தற்போது வைத்திருக்கிறேன். கொச்சியைச் சேர்ந்த ஒரு தயாரிப்பாளர் தயாரித்த மலையாள திரைப்படங்களின் உரிமைகளை நான் வைத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

கதைத் திருட்டை பொறுத்தவரை தேனப்பன் பாதிக்கப்பட்டுள்ளது இது இரண்டாவது முறையாகும். ஆகவே அவர் இது பற்றி அதிகம் திட்டமிட்டு வருகிறார். மேலும் இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வுக்குப் பேசியுள்ள தேனப்பன், “கமல்ஹாசன் மற்றும் பிரபுதேவா ஆகியோர் நடித்த என்னுடைய ‘காதலா ககாதலா’ திரைப்படம் பத்தாண்டுகள் கழித்து இந்தியில் சஜித் கானின் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்டது. நான் அப்போது ஒரு வழக்கைத் தாக்கல் செய்தேன். இந்தப் பிரச்சினை இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எப்படியிருந்தாலும், இந்த நேரத்தில், நான் எனது நெருங்கிய நண்பரான மற்றொரு வழக்கறிஞரை அணுகியுள்ளேன். அவர் மூலம் சர்வதேச வழக்கறிஞரை நான் அணுக முடிவு செய்துள்ளேன்”என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.