சினிமா

"இயக்குநர் பாரதிராஜாவை நேரில் பார்த்தேன்" - இயக்குநர் சீனு ராமசாமியின் தியேட்டர் அனுபவம்

"இயக்குநர் பாரதிராஜாவை நேரில் பார்த்தேன்" - இயக்குநர் சீனு ராமசாமியின் தியேட்டர் அனுபவம்

webteam

மக்களின் பொழுதுபோக்குப் பூங்காவாகத் திகழ்ந்த தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. அக்டோபர் 15 ம் தேதி முதல் தியேட்டர்களைத் திறக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் தியேட்டர் என்பது கனவுகளின் நினைவாக அனுபவங்களில் சேகரமாகியிருக்கும். தன்னுடைய பால்யகால தியேட்டர் அனுபவங்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் சீனு ராமசாமி பகிர்ந்துள்ளார்.

"என் சொந்த ஊரில் மணி இம்பாலா, லஷ்மி என இரண்டு தியேட்டர்கள் இருந்தன. நான் குழந்தையாக இருந்தபோது, 'மணி' தியேட்டருக்குச் செல்ல ஓர் ஓடையைக் கடக்கவேண்டியிருந்தது. எனக்கு சட்டை போட்டுவிட்டு தியேட்டருக்கு அழைத்துச் செல்வார்கள். கிராமங்களின் வழியாக நீண்ட தூரம் நடந்தால்தான் தியேட்டருக்குச் செல்லமுடியும். ஆனால் விரைவாகச் செல்லமுடியாது, ஓடையைக் கடக்கவேண்டியிருக்கும்.

அதன் முனையை அடைந்ததும் என்னை நிறுத்தி, உடைகளைக் கழற்றி தண்ணீரில் தூக்கிச் செல்வார்கள். கரையைக் கடந்ததும் மீண்டும் டிரெஸ் போட்டுவிடுவார்கள். தியேட்டருக்குச் செல்லும்போது போர்வைகளையும் எடுத்துச் செல்வோம். அந்த தியேட்டரில்தான் முதன்முதலாக இயக்குநர் பாரதிராஜாவை நேரில் பார்த்தேன். புதுமைப் பெண் படத்தை புரோமோட் செய்வதற்காக வந்திருந்தார். தியேட்டருக்குள் ரேவதியுடன் அவர் நடந்துசென்றார். பெரும் கூட்டத்திற்கு இடையில் அவர்கள் இருவரையும் பார்த்தேன்.

(புதுமைப் பெண் படத்தில் ரேவதி )

இன்று சினிமா தொழில்நுட்பத்தில் எத்தனையோ மாற்றங்கள் வந்துவிட்டன. ஆனால் பெரிய திரைக்கும் பார்வையாளர்களுக்குமான உறவு இன்னும் மாறவில்லை. சமூக அனுபவம் என்பது மனிதர்களின் அடிப்படை உள்ளுணர்வாக இருந்துவருகிறது. எத்தனையோ தியேட்டர்கள் மூடப்பட்டாலும், தியேட்டர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்" என்று நெகிழ்ந்துள்ளார்.