சினிமா

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' குறித்து கேரள காங்கிரஸின் ட்வீட் - பதிலடி கொடுத்த அனுபம் கேர்

EllusamyKarthik

இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்த படத்தில் ‘புஷ்கர் நாத்’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் அனுபம் கெர். 1990-களில் காஷ்மீரில் வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவிய கதையம்சம் கொண்ட திரைப்படம் இது. 

இந்நிலையில் இந்த படம் குறித்து எழுப்பப்படும் சர்ச்சைகளில் தான் கவனம் செலுத்த விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார். பாக்ஸ் ஆபிஸில் தரமான வசூலை ஈட்டி வருகிறது இந்த திரைப்படம். இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் கேரள கமிட்டி 1990-களில் காஷ்மீர் இந்துக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட போது பாஜக ஆதரவு தந்த வி.பி.சிங் ஆட்சி மத்தியில் இருந்தது என்றும். அது குறித்து பாஜக எதுவும் ஆளும் அரசுக்கு தெரிவிக்கவில்லை என்றும் சொல்லி ட்வீட் செய்துள்ளது. 

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டைம்ஸ் நவ் டிஜிட்டலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார் அனுபம் கெர். அதில் அவர் கேரள காங்கிரஸுக்கு பதிலடி கொடுத்துள்ளார். “இது வெறும் திரைப்படம் அல்ல. இது ஒரு இயக்கம். 32 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கோர சம்பவத்தை கண்முன்னே கொண்டு வந்துள்ளது இந்த திரைப்படம். இப்படியிருக்க அது குறித்து கொஞ்சம் கூட யோசிக்காமல் கேரள காங்கிரஸ் அபத்தமான கருத்துகளை சொல்லியுள்ளதாக நான் பார்க்கிறேன். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பிரதமர்களை பயங்கரவாதத்திற்கு பலி கொடுத்த கட்சி காங்கிரஸ். அதனால் அவர்கள் இதை சொல்லக்கூடாது. இந்த படம் குறித்து எழுப்பப்படும் சர்ச்சைகளில் கவனம் செலுத்த விரும்பவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். 

இந்த படத்திற்கு மூன்று மாநில அரசுகள் வரி விலக்கு வழங்கியுள்ளன. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தொடங்கி பிரதமர் மோடி வரை அனைவரும் இந்த படத்தை பாராட்டியுள்ளனர்.