சினிமா

‘சாதாரண மஞ்சள் குர்தா இவ்வளவு வைரலாகும் என நினைக்கவில்லை’ - ‘96’ த்ரிஷா

‘சாதாரண மஞ்சள் குர்தா இவ்வளவு வைரலாகும் என நினைக்கவில்லை’ - ‘96’ த்ரிஷா

webteam

எனது மஞ்சள் குர்தா இந்த அளவுக்கு வைரலாகும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை த்ரிஷா பெற்றார். ‘96’ படத்திற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதனையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் இதுவரை வாங்கிய விருதுகள் அனைத்தையும் ஒன்றாக வைத்து அவைகளை கட்டி அணைத்தபடி ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தார். இந்த ஆண்டுடன் த்ரிஷா, நடிக்க வந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தச் சமயத்தில் இவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது அவருக்கு கூடுதல் சந்தோஷத்தை உருவாக்கியுள்ளது.

‘96’ படத்தில் த்ரிஷா, ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்கு ‘ஜானு’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. ஆகவே பலரும் தங்களின் இளைமை காலத்தை நினைவுப்படுத்தி, ‘ஜானு’ குறித்து உருகி உருகி எழுதி வந்தார்கள். இந்த ஜானு கதாபாத்திரம் குறித்து த்ரிஷா, “ஜானு பாத்திரத்திற்காக எனக்கு கிடைத்த அன்பு அதிகமானது. அது எதிர்பாராதது. ஆமாம். இது ஒரு நல்ல பாத்திரம் என எனக்குத் தெரியும். அதை நான் உணர்ந்தேன். ஆனால் இந்தப் பாத்திரம் நல்ல வரவேற்பை பெறும் என்பது எனக்குத் தெரியாது. ராமையும் ஜானுவையும் ரசிகர்கள் தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்வார்கள் என்பது எனக்கு தெரியாது. ஒரு எளிமையான மஞ்சள் குர்தா இந்த அளவுக்கு வைரலாகப் போகும் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஜெஸ்சிக்கு பின் இந்த ஜானுதான் அதிகம் பேசப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.