சினிமா

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியில் நீடிப்பதாக கே.பாக்யராஜ் அறிவிப்பு

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியில் நீடிப்பதாக கே.பாக்யராஜ் அறிவிப்பு

webteam

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியில் நீடிப்பதாக இயக்குனர் கே.பாக்யராஜ் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் ‘சர்கார்’படத்தின் கதையும், திரைக்கதையும் தன்னுடையது என்றும் அந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தான் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தயாரிப்பு நிறுவனம் மற்றும் தென்னிந்திய திரைப்பட கதையாசிரியர்கள் சங்கம் பதிலளிக்க உத்தவிட்டது.

இதனிடையே, செங்கோல் என்ற கதையும், ‘சர்கார்’ படக் கதையும் ஒன்றுதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் உறுதி செய்தது.  முழுமையாக உதவ முடியாமைக்கு வருந்துகிறோம் என்று தெரிவித்து கே.பாக்யராஜ் கடிதம் எழுத இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. கதை என்னுடையது தான் என்று முருகதாஸ் பிடிவாதமாக இருந்த நிலையில் ‘செங்கோல்’ என்ற கதையும், ‘சர்கார்’ படக் கதையும் ஒன்றுதான் என பாக்யராஜும் தனது கருத்தில் உறுதியாக இருந்தார். பின்னர் சுமூகமாக பேசப்பட்டு சர்கார் தொடர்பான வழக்கு சமரசத்தில் முடிந்தது. அந்த நேரத்தில் திடீரென்று தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து தான் ராஜினாமா செய்வதாக இயக்குநர் கே.பாக்யராஜ் அறிவித்தார்.

சர்கார் திரைப்படத்தின் கதை பிரச்னையில் தர்ம சங்கடமான சூழ்நிலையை சந்தித்ததாகவும், அதனால் எழுத்தாளர் சங்கத்தின் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், அந்த சங்கத்தின் நிர்வாகிகள் பதவியில் தொடர பாக்யராஜிடம் வேண்டுகோள் வைத்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்க மறுத்த நிலையில், பாக்யராஜ் பதவி விலகினால் மற்ற நிர்வாகிகளும் ராஜினாமா செய்வதாக கடிதத்தை கொடுத்தனர். இந்நிலையில் நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று தலைவர் பதவியில் தொடர்வதாக பாக்யராஜ் தெரிவித்தார்