தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குநர்கள் என்றால் விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், 5 படங்களை மட்டுமே இயக்கி, ஹிட் கொடுத்து பார்க்கும் இடமெல்லாம் பேசுபொருளாக மாறியிருப்பவர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். மாநகரத்தில் தொடங்கி, கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ், லியோ எனும் அதிரி புதிரி ஹிட் படத்தை கொடுத்து அடுத்த படத்திற்கு ரஜினியுடன் கைகோர்த்துள்ளார். இதற்கெல்லாம் அவரது முக்கியமான பண்புகள் தான் காரணம் என்கின்றனர், நெருங்கி பழகியவர்கள்.
பொதுவாக, உதவி இயக்குநர்கள் என்றாலே, அவர்களுக்கு சரியான மரியாதை கொடுக்காமல்தான் நடத்தப்படுவார்கள் என்று சொன்ன காலம் உண்டு. ஆனால், லோகேஷ் கனகராஜோ தன்னுடைய உதவி இயக்குநர்களை சிறப்பாக பார்த்துக்கொள்கிறார் என்று பாராட்டப்படுகிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எவ்வளவு பிசியாக இருந்தாலும், உதவி இயக்குநர்களை சாப்பிட அனுப்பிவிடுவது, தான் சாப்பிடவில்லை எனினும் அவர்களை சாப்பிட சொல்வது, ரெடியாகவில்லை எனில் தானே சாப்பாடு வாங்கி தருவது என்று பாராட்டப்படுகிறார் லோகேஷ்.
குறிப்பாக, எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும், எல்லோரும் முன்பு திட்டாமல், தனியாக அழைத்து தவறை சுட்டிக்காட்டுகிறார் லோகேஷ். தன்னை பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்று சொல்வது, உடன் இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடங்கி, மேடைகளில் உதவி இயக்குநர்களை பாராட்டுவது என்று அனைவராலும் மெச்சப்படுவதால்தான், திரைத்துறையில் வெகுவிரைவாக உச்சம் தொடுவதாக கூறுகின்றனர் விமர்சகர்கள். லோகேஷுக்கு ரஜினி வாய்ப்பு தர அவரது பண்புகளும் முக்கிய காரணம் என்று பேசப்படுகிறது.