ரசிகர்கள் மிகவும் ஆவலோட எதிர்பார்த்த "குயின்" வெப் சீரீஸ் நள்ளிரவு வெளியானது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை கொண்ட வெப் சீரிஸ் என்பதால் இதற்கு பெரும் வரவேற்பு இருந்தது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கம் என்பதாலும் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்திருப்பதாலும் பலரது கவனத்தை ஈர்த்தது. சரி எப்படி இருக்கு "குயின்" ?
பாலிவுட் நடிகை சிமி கர்வால் ஜெயலலிதாவை எடுத்த நேர்காணல் மிகவும் பிரபலம், அதே போன்றதொரு நேர்காணல் காட்சியுடன் தொடங்குகிறது "குயின்", இதில் ரம்யா கிருஷ்ணனின் பெயர் சக்தி சேஷாத்ரி. சிறுவயது சக்தி, பள்ளி மாணவியாக அனிகா சுரேந்திரன் நடித்துள்ளார். சிறுவயதில் படிப்பின் மீதான ஆர்வம், பள்ளியில் எப்போதும் முதல் மாணவி. வீட்டில் இருக்கும் வறுமை, அம்மாவின் தியாகங்கள் என நீள்கிறது முதல் எபிசோட். படிப்பை நிறுத்திவிட்டு அம்மாவிடம் சண்டையிட்டு, கொஞ்சமும் விருப்பமில்லாமல் சினிமாவுக்குள் நுழைகிறாள் சக்தி. இதற்கடுத்தடுத்து இளமைக்காலம், திரையுலக காலம், அரசியல் பிரவேசம், எம்ஜிஆர் இறப்பு என 13 எபிசோட்கள் பிரம்மிக்க வைக்கிறது.
மிக முக்கியமாக தாயாக சோனியா அகர்வால், இளம் வயது சக்தியாக வரும் அஞ்சனா ஜெயபிரகாஷ், எம்ஜிஆர் பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்கள். இதில் இயக்குநர் கவுதம் மேனனும் கவுரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார். குயின் வெப் சீரிஸின் பலமே ஒளிப்பதிவுதான் எஸ்.ஆர்.கதிரின் கேமரா கண்கள், அந்தக் காலத்தையும் நிகழ் காலத்தையும் தனித்தனியாக காட்டுகிறது. அதேபோல "என்னை நோக்கி பாயும் தோட்டா"வின் தர்பூகா சிவாதான், குயின் வெப் சீரிஸ்க்கும் இசை. இந்த வெப் சீரிஸின் ஜீவனை, சிவா தன்னுடைய ஆத்மார்த்தமான பின்னணி இசையால் தாங்குகிறார்.
குயின் வெப் சீரிஸின் ஒரு எபிசோட் கிட்டத்தட்ட 50 நிமிடங்கள், பார்வையாளனின் பொறுமையை சில இடங்களில் சோதித்தாலும், மிக நேர்த்தியான திரைக்கதையும் இசையும் ஒளிப்பதிவும் நம்மை இமை மூடாமல் பார்க்க வைக்கிறது.