சினிமா

‘பயோபிக்லாம் இல்ல’..‘கேஜிஎஃப்’ தயாரிப்பு நிறுவனத்திற்கு சுதா கொங்கரா இயக்கப்போவது இதுதான்!

‘பயோபிக்லாம் இல்ல’..‘கேஜிஎஃப்’ தயாரிப்பு நிறுவனத்திற்கு சுதா கொங்கரா இயக்கப்போவது இதுதான்!

சங்கீதா

‘கே.ஜி.எஃப்.’, காந்தாரா படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு, இயக்குநர் சுதா கொங்கரா உண்மை சம்பங்களை அடிப்படையாகக் கொண்ட படத்தை இயக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் யஷ்ஷின் நடிப்பில் ‘கே.ஜி.எஃப்.’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், அடுத்ததாக ‘காந்தாரா’ படத்தை தயாரித்திருந்தது. இந்த இரு கன்னடப் படங்களுமே வசூலை வாரிக் குவித்த நிலையில், ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படைப்புகள் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் திரையுலகில் தனி முத்திரை பதித்துவரும் இயக்குநரான சுதா கொங்கராவுடன் இணைந்து படம் ஒன்றை தயாரிக்கவிருப்பதாக, அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம், “சில உண்மை கதைகள் சரியான தருணத்தில் சொல்லப்பட வேண்டியவை. எங்களின் அடுத்தப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார் என்பதை அறிவிப்பதில் பெருமைக் கொள்கிறோம். எங்களது எல்லா படங்களைப் போன்று இந்தப் படத்தின் கதையும் இந்திய அளவில் ஈர்க்கும் என்று உறுதியாக நம்புகிறோம்'' எனத் தெரிவித்திருந்தது. இதற்கிடையில் கேப்டன் கோபிநாத் வாழ்க்கையை தழுவி ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை எடுத்ததுப்போல், ரத்தன் டாடா வாழ்க்கையை தழுவி பயோபிக் படம் ஒன்றை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக கடந்த இரு நாட்களாக செய்திகள் உலா வந்தன.

இந்நிலையில் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் கார்த்திக் கௌடா, ‘இந்தியா டுடே’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், சுதா கொங்கராவின் இரண்டு ஸ்கிரிப்ட்டுகளையும் பார்த்து வருவதாகவும், அவை இரண்டுமே தமிழ் படங்களாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அந்தப் படங்கள் பயோபிக் படங்கள் இல்லை என்றும், ஆனால் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கொண்டு உருவாக்கப்படும் படங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அறிவித்ததுப் போன்று உண்மைக் கதைகளை தழுவியப் படங்களை எடுக்கவுள்ளதை கார்த்தி கௌடா சூசகமாக தெரிவித்துள்ளார். இயக்குநர் சுதா கொங்கரா, தற்போது ‘சூரரைப் போற்று’ படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.