சமந்தா-தேவ் மோகன் ட்விட்டர்
ஹாலிவுட் செய்திகள்

’ரூ.65 கோடி பட்ஜெட்’ .. ஆனால், 4 நாட்களில் சமந்தாவின் ‘சாகுந்தலம்’ திரைப்படம் இவ்வளவுதான் வசூலா?

சகுந்தலையின் காதல் கதையை மையமாகக் கொண்டு ‘சாகுந்தலம்’ படம் உருவாகியுள்ளது

சங்கீதா

கடந்த 2015-ம் ஆண்டு அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் வெளியான ‘ருத்ரமாதேவி’ படத்தைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் குணசேகர் இயக்கியுள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்’. காளிதாசன் எழுதிய புராணக் கதையான சகுந்தலையின் காதல் கதையை மையமாகக் கொண்டு ‘சாகுந்தலம்’ படம் உருவாகியுள்ளது. சகுந்தலை வேடத்தில் சமந்தாவும், மன்னன் துஷ்யந்தனாக தேவ் மோகனும் நடித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடைப்பட்ட காதல் கதையைத் தான் படக்குழுவினர் பீரியட் படமாக பிரம்மாண்டமாக எடுத்துள்ளனர்.

சமந்தா

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், கிராபிக்ஸ் பணிகள் முடியாத காரணத்தால் பலமுறை ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 14-ம் தேதி வெளியானது. ஆனால், இந்தப் படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால், படம் வெளியான 4 நாட்களில் 9.06 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம், சீரியல் போன்று இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘யசோதா’ திரைப்படம் ஓரளவு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதித்த நிலையில், ‘சாகுந்தலம்’ திரைப்படம், எதிர்மறை விமர்சனங்களால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இயக்குநர் குணசேகர், தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடஸ்வரா கிரியேஷன்ஸ் உடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.