சினிமா

PT Web Explainer: சொந்த இடம் Vs இசைக் களம்.. இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ பிரச்னைதான் என்ன?

PT Web Explainer: சொந்த இடம் Vs இசைக் களம்.. இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ பிரச்னைதான் என்ன?

webteam

இசை ஒருவரை ஆசுவாசப்படுத்தும், இசை ஒருவருக்கு ஆறுதல் அளிக்கும், இசை ஒருவருக்கு அமைதி கொடுக்கும். மனிதர்களை இசை அடக்கி ஆளும் என்பார்கள். அப்படி இசை குறித்து பேசும்போதெல்லாம் இளையராஜா பெயர் இடம்பெறாமல் இருக்காது. தலைமுறைகள் தாண்டி காற்றில் இன்றும் வீசிக்கொண்டிருக்கிறது இளையராஜாவின் இசை. தலைமுறைகள் தாண்டி பல ஆயிரக்கணக்கான இன்னிசை பாடல்களை கொடுத்துள்ளார் இளையராஜா. அவரின் பாடல்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே இணைப்புப் பாலமாக இருந்த ஓர் இடம்தான் பிரசாத் ஸ்டூடியோ.

சினிமா திரையுலகில் மிகவும் பிரபலமான இடம் ஏவிஎம் ஸ்டூடியோ. அதேபோல இசைக்குப் பிரபலமான இடம்தான் பிரசாத் ஸ்டூடியோ. அதுதான் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இசையமைத்த இடம். பட்டித்தொட்டி எங்கும் ஒலித்த பல பாடல்கள் அங்குதான் உருவாகின. சென்னை - சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ, எல்.வி.பிரசாத் என்பவரால் நிறுவப்பட்டது. அவரது பயன்படுத்தப்பட்ட தனிப்பட்ட அறையில்தான் இளையராஜா இசையமைக்கத் தொடங்கினார்.

இளையராஜாவின் வருகைக்கு பின் இசை, பின்னணி இசை என எப்போதும் பரபரப்பாக இருந்தது பிரசாத் ஸ்டூடியோ. எல்.வி.பிரசாத்துக்கு பின் அவரது மகனான ரமேஷ் பிரசாத் நிர்வாகத்தின் கீழ் வந்தது ஸ்டூடியோ. அப்போதும் இளையராஜா உடனான உறவில் சுமூகமாகவே சென்றது. இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ இடையேயான உறவுப்பற்றி ஒருமுறை கூறிய ரமேஷ் பிரசாத், 'சாதாரண எங்கள் ஸ்டூடியோவை, இளையராஜா கோயிலாக மாற்றியுள்ளார்’ எனக் கூறினார். காலம் ஓடியது. ரமேஷ் பிரசாத்தின் மகன் சாய் பிரசாத் கைக்கு மாறியது பிரசாத் ஸ்டூடியோ. நிர்வாகமும் அவரின் கீழ் சென்றது.

நீண்ட காலமாக இருந்துவரும் பிரசாத் ஸ்டூடியோவின் கட்டமைப்பை மாற்றி அமைக்க முடிவு செய்த சாய் பிரசாத், இது தொடர்பாக இளையராஜா தரப்பை தொடர்புகொண்டு அறையை காலி செய்யுமாறு கோரிக்கை விடுத்தது. ஆனால், முறையான வாடகை கொடுத்து வரும் நிலையில், ’ஒரு கோயிலாக நான் நினைக்கும் ஒரு இடத்தை திடீரென காலி செய்யக் கூறினால் என்ன செய்வது? முடியாது’ என தலையாட்டியது இளையராஜா தரப்பு. இடம் தொடர்பான கோரிக்கையும், மறுப்பும் வெளி உலகத்துக்கு வந்தது. தொடர்ந்து கோரிக்கையை பதிவு செய்துவந்த பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம், அங்கிருந்த மேசை, கம்யூட்டர், நாற்காலிகள் போன்ற பொருட்களை இளையராஜா அறைக்குள் கொண்டுவந்து அடுக்கியது.

இதனை அடுத்து போலீசாரிடம் புகாரளித்தார் இளையராஜா. பின்னர் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகினார். இதற்கிடையே இளையராஜாவுக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் பலரும் பிரசாத் ஸ்டூடியோவை முற்றுகையிட்டனர். ஆனால், தங்களுடைய முடிவில் உறுதியாக இருந்தது பிரசாத் ஸ்டூடியோ தரப்பு. இதற்கிடையே, தன்னுடைய இசைக்குறிப்புகள் திருடப்பட்டு வெளிச்சந்தையில் விற்கப்படுவதாகவும் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். நஷ்ட ஈடாக ரூ.50 லட்சம் வழங்கவேண்டுமென்றும் தெரிவித்திருந்தார். பின்னர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்த இளையராஜா, தன்னை ஸ்டூடியோவில் தியானம் மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்; தன்னுடைய பொருட்களை எடுத்துச்செல்ல அனுமது அளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.

தியானம் தொடர்பான கோரிக்கை குறித்து பேசிய நீதிபதி, “எதிரியையும் உபசரிக்கும் பண்பு கொண்டது தமிழ் மண். இங்கு 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இடத்தில் ஒருநாள் தியானம் செய்ய இளையராஜாவிற்கு உரிமை உள்ளதா? இல்லையா? என்பதை தாண்டி, நீண்ட கால பிரச்னைக்கு மனிதாபிமான அடிப்படையில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்காக ஏன் இளையராஜாவை ஒருநாள் தியானம் செய்ய அனுமதிக்கக் கூடாது?” என்று கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பான விசாரணையில் பதிலளித்த பிரசாத் ஸ்டூடியோ, “பொருட்களை எடுத்துச்செல்ல எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், இளையராஜாவை அனுமதிக்க முடியாது. அவரது பிரதிநிதிகள் யாரேனும் வந்தால் அனுமதிக்கிறோம். இளையராஜா ஸ்டூடியோவிற்குள் வந்தால் கூட்டம் கூட வாய்ப்பு இருக்கிறது. பயன்படுத்தப்படாத பொருட்களின் இழப்பீடுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது” என தெரிவித்தது.

இதை கேட்ட நீதிபதி, பொருட்களை எடுக்க வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிப்பதாகவும், அவருடன் இளையராஜா, பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்கள், இரு தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் செல்லலாம் என யோசனை தெரிவித்ததுடன், இதுகுறித்து இரு தரப்பும் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு அனுமதிக்கும்பட்சத்தில் இழப்பீடு கோரிக்கையை வலியுறுத்த வேண்டாமென இளையராஜாவிற்கு அறிவுறுத்தி இருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 'இளையராஜாவை நிபந்தனைகளுடன் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் நுழைய அனுமதிக்க தயார்' என ஸ்டூடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் 50 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு தங்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு மற்றும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், ஸ்டூடியோவில் இசையமைத்த நிலத்தை உரிமை கோர கூடாது, ஓர் உதவியாளர், ஓர் இசைக்கலைஞர், வழக்கறிஞர் ஆகியோருடன் மட்டுமே இளையராஜாவை அனுமதிக்க முடியும் என நிபந்தனைகளை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஸ்டூடியோவுக்கு தகுந்த காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததோடு, இளையராஜா வந்து செல்லும் நாள் குறித்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் ஆலோசித்து முடிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாக தனது பெயரில் இளையராஜா உயர் நீதிமன்றத்தில் பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இளையராஜா, தான் இதுவரை இசை அமைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நூற்றுக்கும் குறைவான படங்களுக்கே ஒப்பந்தம் கையெழுத்திட்டு இசை அமைத்திருப்பதாகவும் மற்ற அனைத்து படங்களுக்கும் வாய் வார்த்தை அடிப்படையிலேயே ஒப்பந்தம் செய்து அதன்படி நடந்து கொண்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தநிலையில் தான் சொன்ன வார்த்தையில் இருந்து மாறக்கூடும் என்று பிரசாத் தரப்பு கூறியதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து, தான் கையெழுத்திட்ட பிரமாணம் தாக்கல் செய்ய மறுப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் தன் சார்பில் நியமித்துள்ள வழக்கறிஞர்கள் தாக்கல் செய்யும் மனு அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க கோரிக்கை விடுத்தார். அதன்பேரில் இளையராஜாவின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த தகவல் அடிப்படையில், பிரசாத் ஸ்டூடியோ வளாகத்தில் ஆண்டு காலமாக இசை கோர்ப்புகள் செய்து வந்த இடத்திற்கு இளையராஜா ஒரு நாள் செல்ல அனுமதித்து உத்தரவு பிறப்பித்தது.

மேலும் வழக்கறிஞர் ஆணையர் முன்னிலையில் அவரது பொருட்களை சேதாரமின்றி திரும்ப ஒப்படைக்கவும் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. முன்னதாக பிரசாத் தரப்பு இளையராஜா அவர்களின் பொருட்கள் எந்த சேதாரமும் இன்றி நல்ல நிலையில் பாதுகாக்கப்‘ பட்டுள்ளதாகவும் அதே நிலையில் திரும்ப கொடுப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்ல இளையராஜாவுக்கு ஒருநாள் அனுமதி வழங்கினார். பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்று இசைக்கருவிகளை எடுக்கும் தேதியை இருதரப்பும் பேசி முடிவு செய்யலாம் எனவும், நேரத்தை பொருத்தவரை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். அதேநேரத்தில், அவர் தியானம் மேற்கொள்வது குறித்தும் முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். மேலும், இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ செல்லும்போது போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

ஆக, இதுவரை நடந்துவந்த இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ இடையிலான பிரச்னை முடிவுக்கு வருவதாக கருதலாம்.