சினிமா

பாடகி ஜானகி உடல்நிலை சீராக உள்ளது, வதந்திகளை நம்ப வேண்டாம்: மகன் விளக்கம்

பாடகி ஜானகி உடல்நிலை சீராக உள்ளது, வதந்திகளை நம்ப வேண்டாம்: மகன் விளக்கம்

webteam

 பாடகி ஜானகி உடல்நிலை குறித்து வெளியாகும் தகவலில் உண்மையில்லை என்று அவரது மகன் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியத் திரையுலகில் தலைசிறந்த பாடகியாக வலம் வருபவர் ஜானகி. இவரது குரலுக்கு ஆயிரக்கணக்கான தமிழ் நெஞ்சங்கள் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். 1957 ஆண்டு திரைத்துறையில் பாடத் துவங்கிய இவர் இதுவரை ஆயிரக்கணக்கான பாடல்களைத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார்.

இளையராஜாவின் இசையில் இவர் பாடிய அத்தனைப் பாடல்களும் பெரும் புகழை அவருக்குத் தேடித் தந்தன. மூத்த தலைமுறை பாடகியான இவர், சில ஆண்டுகளுக்கு முன் இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் ‘அம்மா அம்மா அம்மா’ என்ற பாடலைப் பாடியிருந்தார். தாய்மையைப் போற்றும் அந்தப் பாடல் இளம் தலைமுறையும் வசீகரித்தது. சில ஆண்டுகளாக உடல்நிலை ஒத்துழைக்காததால் அவர் பாடுவதை நிறுத்துவதாக அறிவித்தார். அன்று முதல் அவரது குரலைத் திரை உலகம் கேட்க முடியாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், பாடகி ஜானகி உடல்நிலை பற்றி தவறான தகவல் பரவி வருகிறது. அவர் உடல்நிலை குறித்த தகவல்களை கேரளாவில் உள்ள அவரது மகன் புதியதலைமுறையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், அவரது தாயார் மிக ஆரோக்கியத்துடன் இருந்து வருவதாகவும் தேவையற்ற செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அறுவை சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை முன்னேறி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் கட்டற்ற சுதந்திரம் வந்ததிலிருந்து இவரைப் போன்ற மூத்த ஆளுமைகள் குறித்து தவறான தகவல்கள் வெளியாவது வாடிக்கையாகியுள்ளது. ஆகவே இதைப் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஒரு தரப்பினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.