hina khan insta
சினிமா

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகை ஹினா கான் வெளியிட்ட உணர்வுப்பூர்வமான வீடியோ!

Prakash J

பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான், தனக்கு புற்றுநோய் இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இதுகுறித்த அவருடைய பதிவில், “என் நலன் விரும்பிகளுக்கு முக்கியமான செய்தியொன்றை பகிர்கிறேன். நான் 3ஆம் நிலை மார்பக புற்றுநோய் பாதிப்பில் இருப்பது, பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த இக்கட்டான சூழலிலும் தைரியமாகவே இருக்கிறேன். இதற்கான சிகிச்சையும் தொடங்கியுள்ளது. உங்கள் அன்பிற்கும் ஆசிர்வாதங்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்திருந்தார்.

இது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது. எனினும், இவருடைய பதிவுக்குப் பலரும் ஆறுதல் தெரிவித்திருந்தனர். நடிகை சமந்தாகூட ஆறுதல் தெரிவித்திருந்தார். சமந்தா தன் பதிவில், “உங்களுக்காக பிராத்திக்கிறேன் ஹினா கான்” எனக் கூறியதுடன் ‘போராளி (வாரியர்)’ என்றும் ஹினா கானை குறிப்பிட்டுள்ளார்.

இதனைப் பகிர்ந்த ஹினா கான், “நீங்கள் மிகச்சிறந்த நட்சத்திரம் என்பதை அறிவேன் சமந்தா. வாழ்க்கை உங்கள்மீது வீசிய அனைத்தையும் நீங்கள் எதிர்கொண்ட விதம் ஆச்சரியத்துக்கும் அப்பாற்பட்டது. நிறைய அன்பும் வாழ்த்துகளும் சமந்தா” எனக்கூறி நன்றி தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: மியான்மர்| ஊழியர்களுக்கு சம்பளம் அதிகம் வழங்கிய முதலாளி.. கடைகளை மூடி கைதுசெய்த ராணுவம்!

இந்த நிலையில் புற்றுநோய் குறித்த அவரது அடுத்த இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் ஹினா கான், ”இந்த உலகத்தில் அழகான பல மனிதர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக பெண்கள். ஆனால் அப்படியான பெண்கள் இந்த நோயுடன் போராடுவதன் கடினம் எனக்குத் தெரியும். நமக்குத் தலைமுடிதான் மகுடம் போன்றது. யாரும் அதைக் கழட்ட விரும்பமாட்டோம். ஆனால் போராட்டம் கொடியதாக இருக்கும் சமயத்தில், உங்களது தலைமுடியை இழக்கவே செய்ய வேண்டும்.

நான் இந்தப் போராட்டத்தில் வெற்றியடைய விரும்புகிறேன். அதனால் எனக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்பில்கூட நான் வெற்றியடைய நினைக்கிறேன்.

அதனால் முடியை இழக்கும் முன்பே அதனை வெட்டிவிட முடிவெடுத்தேன். உண்மையான மகுடம் என்பது எனது தன்னம்பிக்கையும் வலிமையும் என்னை நானே காதலிப்பதும்தான். இந்தக் காலகட்டத்தில் எனக்கான விக்கினை (செயற்கை முடி) எனது சொந்த முடியை வைத்தே தயாரிக்கவிருக்கிறேன். தலைமுடி, புருவ முடிகள் மீண்டும் வளரும். வடுகள் மறையும். ஆனால் எனது தன்னம்பிக்கை மட்டுமே முழுமையானது; மாறாதது.

எனது பயணத்தை நான் வீடியோவாக பதிவு செய்கிறேன். எனது துன்பமுறுகிற இந்த அனுபவம் மற்றவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயனளிக்கும். இதிலிருந்து நான் மீண்டுவர, என்னுடைய இந்த முடிவு உற்சாகத்தை அளிக்குமென நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். அவருடைய இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக பாலிவுட் நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தாகிரா காஷ்யப், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல், நடிகை சமந்தாவும் மயோசிடிஸ் என்னும் தசை அழற்சி நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சைகளின் மூலம் மீண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ராஜஸ்தான்| 1 ரூபாய் பணம்.. 1 தேங்காய் மட்டுமே வரதட்சணை.. பேசுபொருளான இஞ்சினீயர் மணமகன்!