நடிகை கங்கனா ஹிமாச்சல் பிரதேசத்தின் மகள் என்றும் அவருக்கு பாதுகாப்பு வழங்குவது எங்கள் கடமை என்றும் ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் பேசியுள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பாலிவுட்டின் வாரிசு நடிகர்களின் ஆதிக்கமே காரணம் என்றும், இந்த கும்பலின் தலைவராக இயக்குனர் கரண் ஜோகர் இருக்கிறார் என்றும் நடிகை கங்கனா ரனாவத் வெளிப்படையாக குற்றம்சாட்டி வந்தார்.
இந்நிலையில் அண்மையில் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த கங்கனா, சுஷாந்த் சிங் ராஜ்புத் தொடர்பான புகாரை மும்பை காவல்துறை புறக்கணித்ததாகவும், தான் பாதுகாப்பற்றவளாக உணர்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
இதனை கண்டிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ”கங்கனாவின் குற்றச்சாட்டுகளை வன்மையாக கண்டிப்பதாகவும், மும்பையில் தங்கியிருப்பதால் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், அவர் இங்க தங்கியிருக்க உரிமை கிடையாது” என பதிலளித்தார்.
கங்கனா கருத்திற்கு பதில் அளித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் “ அச்சமாக இருந்தால் மும்பைக்கு வரவேண்டாம் என்றும் மகாராஷ்டிராவை அவமதித்து பேசியதற்காக அவர் மன்னிப்புக் கோர வேண்டும் ”எனவும் சாடினார்.
இதற்கு பதிலளித்த கங்கனா 9-ஆம் தேதி அதாவது இன்று மும்பைக்கு வரப்போவதாகவும் முடிந்தால் தடுத்து பாருங்கள் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் கங்கனாவின் சகோதரி ரங்கோலி மற்றும் தந்தை ஆகியோர் ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கங்கனாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து பேசிய ஜெய்ராம் தாக்கூர், கங்கனா ஹிமாச்சலப் பிரதேசத்தின் மகள் மட்டுமல்ல அவர் பிரபலமானவரும் கூட. அதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை. இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க டிஜிபி சஞ்சய் குண்டுவிடம் பேசியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் செப்டம்பர் 9 தேதி மும்பை புறப்படுகிறார். ஆகையால் தேவைப்பட்டால் மாநிலத்திலும் பிற இடங்களிலும் அவருக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.