சினிமா

சுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்!

சுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்!

webteam

இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன், பாலிவுட் நடிகர் அபய் தியோல், அர்ஜூன், இவானா, ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

இரும்புத்திரை திரைப்படத்தில் செல்போன் உலகத்திற்கு பின்னால் இருக்கும் நவீன கொள்ளையை திரையில் கொண்டு வந்த மித்ரன் அதே பாணியை இந்த படத்திலும் முயற்சி செய்திருக்கிறார். குறிப்பாக கல்வியில் நடக்கும் வியாபாரத்தை பற்றி பேசுவதாக ட்ரைலர் உள்ளது. போலி சான்றிதழ்கள் தயாரிப்பு, அதன் பின் நடக்கும் பெரிய வர்த்தகம் என ட்ரைலர் பல குறிப்புகளை கொடுக்கிறது. குறிப்பாக நான் படிப்பை வைத்து வியாபாரம் செய்பவன் இல்லை. படிப்பவர்களை வைத்து வியாபாரம் செய்பவன் என வில்லன் பேசும் வசனம் கவனம் பெறுகிறது. 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், போலி சான்றிதழ் கொடுத்து பேராசிரியர் பதவிகள் என தினந்தோறும் நம்மை கடக்கும் செய்திகளை ஹீரோ படம் எதிரொலிக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள். வழக்கமான டெக்னாலஜி அதிரடியை இயக்குநர் மித்ரன், ட்ரைலரில் காட்டியுள்ளார். இரும்புத்திரை படத்தில் மிரட்டிய அர்ஜூன் இந்த படத்திலும் டெக்னாலஜியை கையாளும் நபராக வருகிறார்.

கல்விக்கு எதிராக டெக்னாலஜி உதவியுடன் நடக்கும் வணிகத்தை சூப்பர் ஹீரோ முகமூடியுடன் எதிர்த்து நிற்கும் ஹீரோவாக சிவகார்த்திகேயன் வருவதாக தெரிகிறது. ஹீரோவுக்கு உதவும் டெக்னாலஜி குருவாக அர்ஜூன் இருக்கலாம்.

கதாநாயகியாக வரும் கல்யாணி பிரியர்தர்ஷன், காதல் காட்சிகளுக்காக மட்டும் பொருத்தப்பட்ட கதாபாத்திரமாக தெரிகிறது. ட்ரைலரிலேயே இசையால் மிரட்டும் யுவன் சங்கர் ராஜா, நிச்சயம் படத்திற்கு பெரிய பலமாக இருப்பார் என்பது தெரிகிறது.

சுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ என சிவகார்த்திகேயன் குரலில் முடியும் ஹீரோ படத்தின் ட்ரைலர், தமிழில் ஒரு லாஜிக்கான சூப்பர் ஹீரோவின் கதையை டெக்னாலஜி உதவியுடன் பேசும் என்று நம்பலாம்.