நடிகைகளின் பாலியல் புகாரில் சிக்கிய ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனின் கதை சினிமாவாக உருவாகிறது.
ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகைகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. பிரபல ஹாலிவுட் நடிகைகளான ஏஞ்சலினா ஜோலி, கைனெத் பால்ட்ரோ, காரா டெலவிங்னி உள்பட சுமார் 80 நடிகைகள் அவர் மீது பாலியல் புகார் கூறியிருந்தனர். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் #MeToo என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. அதில் நடிகைகள் பலர் புகார் கூறி வந்தனர்.
இந்நிலையில் இரண்டு பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹார்வி மீது வழக்குப் பதிவு செய்த நியூயார்க் போலீசார், அவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் ஜாமினில் விடுதலை ஆனார்.
(பிரையன் தே பால்மா)
இந்நிலையில் ஹார்வியின் பாலியல் தொல்லைகளை மையமாக வைத்து ஹாரார் படம் ஒன்று ஹாலிவுட்டில் தயாராகிறது. இதை பிரையன் தே பால்மா (Brian De Palma) இயக்குகிறார். இவர், த அன்டச்சபள்ஸ்’, ’மிஷன் இம்பாசிபிள்’, ’மிஷன் டு மார்ஸ்’ உட்பட ஏராளமான படங்களை இயக்கியவர். ’ஹார்வி பற்றிய கதைகளை கடந்த சில வருடங்களாக அதிமாக கேள்விபட்டு இருக்கிறேன். அதை மையமாக வைத்து கதையை உருவாக்கி இருக்கிறேன்’ என்று பிரையன் தே பால்மா தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், தன்னைப் பற்றி டாகுமென்டரி படம் ஒன்றை உருவாக்க இருப்பதாக ஹார்வி வெயின்ஸ்டீன் தெரிவித்திருந்தார்.