கெளதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடித்துள்ள படம், 'ஹர ஹர மகாதேவகி'. புளு கோஸ்ட் புரொடக்ஷன்ஸ், தங்கம் சினிமாஸ் தங்கராஜ் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் பி. ஜெயகுமார் இயக்கியுள்ளார். பாலமுரளி பாலு இசை அமைத்துள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில் நிக்கி கல்ராணி பேசும்போது, ’டார்லிங் படம் மூலம் என்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இந்த படத்தின் கதையை கேட்கும்படி சொன்னார். இயக்குநர் சந்தோஷ், என் வீட்டுக்கு வந்து கதை சொன்னார். கதையை கேட்டு சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது. சந்தோஷ் என்னிடம் கதை சொன்ன போது என் பகுதியை மட்டும்தான் கூறினார். இப்போது இங்கே வந்த பிறகு தான் கதை, திரைக்கதை, வசனம் என்று அனைத்தும் எனக்கு கொஞ்ச கொஞ்சமாக தெரிகிறது. கௌதம் கார்த்திக் எனக்கு நல்ல நண்பன். ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு தமிழ் சரியாக தெரியாததால் ஆசிரியர் போல தமிழ் கற்று கொடுத்தார்’ என்றார்.
தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, கதிரேசன், ராஜசேகர பாண்டியன், தயாரிப்பாளர் தங்கராஜ், நடிகர்கள் ரவிமரியா, சதீஷ், இயக்குநர் ஆர்.கண்ணன், கௌரவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.