சினிமா

'ஜாக்' முதல் 'கால்வின்' வரை: டி காப்ரியோ வெறும் ஹீரோ மட்டுமல்ல..!

'ஜாக்' முதல் 'கால்வின்' வரை: டி காப்ரியோ வெறும் ஹீரோ மட்டுமல்ல..!

webteam

டைட்டானிக் மூலம் இந்திய ரசிகர்களை வசீகரிக்கத் தொடங்கிய ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டி காப்ரியா, ஹீரோ என்ற பிம்பத்தைத் தாண்டி பதித்த தடங்களை அடுக்கும் அவரது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பார்வை.

இணைய வசதிகள் எதுவுமில்லாத காலகட்டத்தில், நமக்குப் பரிச்சயமான அல்லது பெயர் தெரிந்த ஹாலிவுட் நடிகர்கள் யார் யாரென்று சற்றே சிந்தித்துப் பார்த்தால் ஆர்னால்டு, சில்வஸ்டர் ஸ்டேலன் முதலானோர் மட்டுமே நினைவுக்கு வருவர். அதிலும் ஆர்னால்டின் முழுப்பெயரை சொல்வதற்குள் நாக்கு சுழன்றுகொள்ளும்.

இதுபோக, அப்போது தொடர்ந்து ஜேம்ஸ்பாண்டாக நடித்துக் கொண்டிருந்த பியர்ஸ் பிராஸ்னன் மற்றும் பழைய நடிகர்களான மார்லன் பிராண்டோ, ராபர்ட் டீ நீரோ, அல் பசினோ போன்று சில பெயர்கள் ஆங்கிலப் படம் நிறைய பார்ப்பவர்களுக்கு தெரிந்திருக்கும். மற்றபடி இந்த நடிகர்கள் நடித்த படங்கள் எல்லாம் தெரிந்த முகங்கள் என்கிற அளவில்தான் கூறமுடியும்.

அதிலும் ஆர்னால்டு, ஸ்டேலன் போன்றோர் ஆக்‌ஷன் ஹீரோக்கள். 2000-க்கு முந்தைய காலகட்டங்களில் ஆங்கிலப் படங்கள் என்றாலே, அவை ஆக்‌ஷன் படங்கள்தான். நிர்வாண காட்சிகள் தணிக்கை செய்யப்பட, படத்தின் இறுதிக்காட்சியில் நாயகனும் நாயகியும் உதட்டு முத்தம் தருவதை மட்டுமே தரிசிக்க வாய்ப்பு கிடைத்த, மற்ற நேரங்களில் எல்லாம் தடால் புடால் என்று மிரள வைக்கின்ற, சேசிங் காட்சிகளில் கார்கள் பறக்கின்ற, தோட்டாவே தீராத துப்பாக்கிச் சண்டைகள் நிறைந்த படங்கள் மட்டுமே ஆங்கிலப் படங்கள் என்று பெரும்பாலும் நினைத்துக் கொண்டிருந்த சமூகம் இது. 'ஜாஸ்', 'ஜுராசிக் பார்க்' போன்ற படங்கள் மூலம் மிருகங்கள், மனிதனை வேட்டையாடும் படங்களுக்கும் தனி மவுசு இருந்தது. அந்த நிலையில்தான் 'டைட்டானிக்' வந்தது.

'டைட்டானிக்' ஜாக்!

'டைட்டானிக்' மற்ற ஆங்கிலப் படங்கள் போல் இல்லை. கடைசி அரைமணி நேரத்திற்கும் மேல் அந்த மிகப் பெரிய கனவுக் கப்பல் ஒன்று மூழ்குவது தத்ரூபமாக நம் கண் முன் விரிந்தது ஒருபக்கம் மிரட்டலாக இருந்தாலும்கூட, படம் மொத்தம் மூன்று மணிநேரம் ஓடக்கூடியது. ஒரு அழகான காதல் கதை மற்ற இரண்டரை மணிநேரமும் காண்பிக்கப்படும்.

இமாலய வெற்றியை இந்தியாவில் அடைந்தது டைட்டானிக். எனக்கு தெரிந்து 'ஜுராசிக் பார்க்' படத்திற்கு பிறகு இரு நண்பர்கள் சந்தித்துக் கொள்கையில், "என்னடா டைட்டானிக் பார்த்துட்டியா?" என்று குசலம் விசாரிப்பதுபோல் கேட்பது நிகழ்ந்தது.

அந்தப் படத்தில் அறிமுகமான பெயர்தான் 'ஜாக்'. லியனார்டோ டி காப்ரியோ என்கிற நடிகர் ஏற்று நடித்திருந்த பாத்திரம் இது. 1000-க்கும் மேற்பட்ட நடிகர்களை ஆடிஷன் செய்து இறுதியாக டி காப்ரியோதான் டைட்டானிக் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டி காப்ரியோ முதலில் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க தயங்கினார் என்றும்கூட சொல்கிறார்கள். ஆனால், படம் வெளிவந்து இமாலய வெற்றி அடைந்த பின்னால் 'லியோ-மேனியா' ஒன்றே உருவானதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இப்படித்தான் 'ஜாக்' இந்திய மக்களுக்கு அறிமுகமாகிறார். படத்தில் அவர் வைத்திருந்த ஹேர்ஸ்டைல் போலவே பலரும் தங்கள் முடியை அலங்காரம் செய்துகொண்டனர். ஒரு நடிகரின் மிகப்பெரிய வெற்றியும், அவர் மக்கள் மனதில் பதிந்துவிட்டார் என்கிற செய்தியும் இதன்மூலம் உணரலாம்.

'த மேன் இன் தி அயன் மாஸ்க்' (The man in the iron mask) கதை மிகவும் புகழ்பெற்றது. தமிழிலேயே 'உத்தமபுத்திரன்' என்கிற பெயரில் இரண்டுமுறை படமாக்கப்பட்டது. பின்னர் ஹாலிவுட்டில் மீண்டும் அதை எடுத்தபொழுது, அதில் நாயகனாக டி காப்ரியோ இருந்தார். மதுரை மாப்பிள்ளை விநாயகரில் அந்தப் படம் வெளியானபொழுது என் நண்பர் கூட்டம் சொன்ன வசனம், "டேய் ஜாக் நடிச்ச படம் வந்திருக்குடா... போலாமா?" என்பதுதான். ஆர்னால்டு போலவோ அல்லது ஸ்டேலன் போலவோ ஜாக், மன்னிக்கவும், டி காப்ரியோ ஆக்‌ஷன் ஹீரோ அல்ல. சீட்டின் நுனியில் அமரவைக்கும் சண்டைக்காட்சிகள் படத்தில் இருக்கப்போவதில்லை. வளவளவென்று ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே இருப்பார்கள். சப்டைட்டிலும் கிடையாது அப்போதெல்லாம். ஆனாலும் அந்தப் படத்தை கூட்டமாக சென்று திரையரங்கை அதிரவைத்தோம். டி காப்ரியோ படத்தில் தோன்றும் முதல் காட்சிக்கு எழுந்த கைத்தட்டலும் விசில் சத்தமும் இன்னும் மறக்க இயலாத ஒன்று.

இதை ஏன் இவ்வளவு விவரமாக சொல்கிறேன் என்றால், நம் தமிழ்ச் சூழலில் ஒரு நடிகர் மக்கள் மனதில் இடம்பெறுவதென்பது லேசுப்பட்ட காரியம் அல்ல. அதிலும் வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை "அட நம்ம பய நடிச்ச படம்டா..." என்று கூறி பார்க்கப்போவது எல்லாம் எளிதில் நடந்துவிடாது. அதை டி காப்ரியோ சாதித்தார்.

இதன் பிறகு இவர் நடித்த 'கேட்ச் மி இஃப் யூ கேன்' (Catch me if you can) திரைப்படம் எல்லாம் உண்மையில் திரையில் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் பார்த்த படங்களில் ஒன்று. ஆனால், அதை முழுவதும் பார்க்க வைத்தார் டி காப்ரியோ. இந்தப் படத்திற்கு பின்னர்தான் அவர் முதன்முதலாக மார்ட்டின் ஸ்கார்சிஸ் இயக்கத்தில் நடித்த 'Gangs of Newyork' வெளிவந்தது. இந்தக் கூட்டணி அடுத்து செய்யப்போகும் பல மேஜிக்குகளுக்கு அஸ்திவாரமாக இது அமைந்தது.

ஸ்டார் மட்டுமல்ல... நடிகர்!

டி காப்ரியோ ஒரு ஸ்டார் என்பதை விட ஒரு நடிகராக அவரது பரிமாணங்கள் அட்டகாசமானது. 'நடிச்சா ஹீரோதான் சார்' போன்ற காமெடி எல்லாம் ஹாலிவுட்டில் இல்லை என்பதால், தன் திரையுலக பயணத்தின் உச்சத்தில் இருக்கையிலும்கூட உறுதுணை கதாபாத்திரத்திலும், கொடூரமான வில்லன் வேடத்திலும் அவர் நடிக்கத் தவறவில்லை. அதிலும் மார்ட்டின் ஸ்காரசிஸ் உடன் இவர் இணைந்து பணியாற்றிய படங்கள் எல்லாமே பயோபிக் எனப்படும் வாழ்க்கை வரலாறுகளை அடிப்படையாக கொண்டவை. அதில் மிக முக்கியமானது 'வூல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்' (Wolf of Wall street). ஜோர்டன் பெல்ஃபோர்ட் என்பவரின் வரலாறு அது. பங்குச்சந்தையில் பலரை ஏமாற்றிய, எந்நேரமும் போதைமருந்து உட்கொள்கிற, பின்னர் அதன் காரணமாகவே பல பிரச்னைகளைச் சந்திக்கிற ஒரு பாத்திரம் அது. அந்தப் படம் முழுதும் டி காப்ரியோ நடிப்பில் ஒரு உன்மத்த நிலை இருக்கும். உற்சாகம் பொங்கி வழிகின்ற ஒரு பெரும் திறமையை வெளிப்படுத்தி இருப்பார். அதைப் பார்க்கும் நமக்கும் கடத்தி இருப்பார்.

இதற்கு நேரெதிராக 'ஷட்டர் ஐலேண்ட்' (Shutter Island) படத்தைக் குறிப்பிடலாம். தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாமே அமானுஷ்யமாக இருப்பதாய் உணரும் ஒருவன், அதிலிருந்து வெளிவர எடுக்கும் அதீத முயற்சிகளே படம். ஆனால், உண்மையில் டெட்டி என்கிற அந்தக் கதாபாத்திரமே ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட, எல்லாவற்றையும் தன் கற்பனையில் பாவிக்கின்ற ஒருவன் என்கிற உண்மை நமக்கு இறுதியில் தெரியவரும்பொழுது நிகழும் அதிர்ச்சியும் அற்புதமான உணர்வை தரக்கூடியவை. அந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான அத்தனை உணர்ச்சியையும் டி காப்ரியோ பிரமாதமாக தந்திருப்பார். ஆனால், இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடக்கூடிய ஒரு படமும் உண்டு. அது 'ஜாங்கோ அன்ஜெயிண்டு' (Django Unchained).

டி காப்ரியோ ஒரு முன்னணி கதாநாயகர். கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட முறை அதிகளவு சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இருந்தவர். இருப்பவர். அவர் இந்தப் படத்தில் அறிமுகமாவதே இடைவேளைக்கு பிறகுதான். அதுவும் சாதாரண ஆளாக இல்லை. நாயகனாகவோ அல்லது நல்லவனாகவோ இல்லை. கால்வின் கேண்டி என்கிற கொடூரமான ஒரு வில்லனாக. நிறவெறி உச்சத்தில் இருந்த காலகட்டம் ஒன்றில், கறுப்பர்கள் அனைவரும் அடிமையாக மட்டுமே இருக்க லாயக்கானவர்கள் என்கிற மனநிலை மிகுந்திருந்த ஒரு நேரத்தில் ஒரு வெள்ளைக்கார துரையாக வருவார். பதைபதைப்பான ஒரு காட்சியில் எதிரில் அமர்ந்திருக்கும் இரண்டு நாயகர்களுக்கு முன்னால் ஒரு மண்டையோட்டை ரம்பத்தால் அறுத்து, வெள்ளையர்களுக்கும் கறுப்பர்களுக்கும் பிறப்பிலேயே இருக்கும் பெரும் வித்தியாசம் ஒன்றை விளக்கும் காட்சி அது. உண்மையில், இந்த நொடி அந்தக் காட்சியை நீங்கள் பார்த்தாலும்கூட உங்கள் மெய் சிலிர்க்கும். அப்படி ஒரு பெரும்போதை ஒன்றை தரும் காட்சி அது. டி காப்ரியோ என்கிற நடிகனை நீங்கள் நன்றாக அறிந்துகொள்ள நினைத்தால் அந்தக் காட்சியை பாருங்கள். புரிந்துகொள்வீர்கள்.

'தி இன்செப்ஷன்' (The Inception) படம் 'கனவு வேட்டை' என்கிற பெயரில் தமிழில் வெளிவந்தது. உண்மையில் தமிழில் மொழிமாற்றம் செய்து ஹாலிவுட் படங்கள் வர ஆரம்பித்தது ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம். ஆக்‌ஷன் படங்களையும் தாண்டி எல்லாவிதமான படங்களும் பரவலாக போய்ச்சேர இது வழிவகுத்தது. கிறிஸ்டோபர் நோலன் 'பேட்மேன்' எடுத்த இயக்குனர் என்கிற வகையில்தான் நம் மக்களுக்கு அறிமுகம். ஆனால், 'இன்செப்ஷன்' வந்தபொழுது நம்மூரில் அந்தப் படத்திற்கு எழுந்த வரவேற்பு கணிக்க இயலாத ஒன்று. கனவு, கனவுக்குள் கனவு என்று பார்க்கும் அனைவரையும் ஓர் ஆழ்ந்த மயக்கத்திற்குள் இட்டுச்சென்ற படம் அது. வேறு யார் நடித்திருந்தாலும் கூட இந்தப் படம் பேசப்பட்டிருக்கலாம். ஆனால், டி காப்ரியோ நடித்ததால் அதற்கு நம் ஊரில் கிடைத்த ஓப்பனிங் நாம் யூகிக்க இயலாதது. இப்படம் பற்றிய விவாதங்கள் இன்றளவும்கூட சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படுவதே அதற்கு சாட்சி.

ஆஸ்கர் தருணம்...

இதுபோக 'தி டிபார்டடு' (The Departed), 'பிளட் டையமன்ட்' (Blood Diamond), 'பாடி ஆஃப் லைஸ்' (Body of Lies) என ஆக்‌ஷன், அட்டகாசமான நடிப்பு கலந்த பல படங்கள் டி காப்ரியோ பெயரை சொன்னாலும்கூட அமெரிக்க நடிகர்களின் கனவான ஆஸ்கர் டி காப்ரியோவிற்கு எட்டாத கனியாகவே இருந்தது.

'டைட்டானிக்' படம் 11 ஆஸ்கர்களை வென்றிருந்தாலும்கூட சிறந்த நடிகர் விருதை வாங்கவில்லை. காரணம், ஜாக் நாமினேட் செய்யப்படவே இல்லை. 'தி ஏவியேட்டர்' (The Aviator) படத்திற்காக முதன்முதலில் சிறந்த நடிகர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டாலும்கூட, ஆஸ்கர் கிடைக்கவில்லை. பின்னர், அதே கூட்டணியின் 'தி வூல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்' (Wolf of wall street) படத்திற்காகவும் நாமினேட் செய்யப்பட்டு கைநழுவி போனது. இறுதியாக. 'த ரெவனன்ட்' (The Revenant) படத்தில் நடித்ததற்காக 2015-ல் விருதை வாங்கினார் டி காப்ரியோ.

'த ரெவனன்ட்' திரைப்படம் ஒரு சர்வைவல் வகையை சார்ந்தது. பனி அடர்ந்த ஒரு பெரும் வனத்திற்குள் ஒருவன் தன் உயிரை காப்பது மட்டுமின்றி, தனது பழியையும் தீர்க்கும் கதை. இப்படத்தின் ஒரு காட்சியில் இரவின் குளிர் தாங்காது, இறந்துபோன ஒரு குதிரையின் வயிற்றைக் கிழித்து அதற்குள் தஞ்சமடைந்து உயிர் பிழைப்பார் டி காப்ரியோ. சில்லிடவைக்கும் காட்சி அது. அதேபோல்தான் ஒரு வெறிகொண்ட கரடியுடன் அவர் இடும் சண்டை. டி காப்ரியோவின் முந்தையை படங்களை ஒப்பிடுகையில் 'த ரெவனன்ட்' அவ்வளவு சிறந்த நடிப்பைக் கோரவில்லை என்றாலும்கூட அவர் ஆஸ்கர் வாங்கியதை தாங்களே வாங்கியது போன்று உலகமே கொண்டாடியது ஒன்றேபோதும் அவர் எந்தளவிற்கு ஒரு நடிகர் என்பதைத் தாண்டி நம் மனதில் குடியிருக்கிறார் என்பதை சொல்லிவிடும்.

அட்டகாசமான ஆஸ்கர் உரை:

டி காப்ரியோ விருது வாங்கிய அந்த இரவில், ஆஸ்கர் மேடையில் பேசிய உரையும்கூட அட்டகாசமானது. "வானிலை மற்றும் பருவநிலை மாற்றம் உண்மையானது. இப்போது நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருப்பது. நாம் எதிர்கொண்டிருக்கும் அச்சுறுத்தல்களில் மிகவும் முக்கியமானது. நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து, காலதாமதம் இன்றி சரிசெய்யவேண்டியது இது. இந்த பெரும் பிரச்னையை முன்னெடுத்து பேசும், செயலாக்கும் எல்லாருக்கும் நாம் உடனடியாக ஆதரவு தரவேண்டியது வெகு அவசியம். அதுவே, இந்த பருவநிலை மாற்றத்தினால் பெருமளவு பாதிக்கப்படக்கூடிய அடித்தட்டு மக்களை காக்கும். நமக்காக மட்டுமல்ல; வரப்போகின்ற நம் எதிர்கால தலைமுறைக்காகவும் நாம் இதைச் செய்தே ஆகவேண்டும். குரல் நசுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் நாம் இந்நேரத்தில் இருத்தல் அவசியம்" என்றார்.

வழக்கமாய் விருது வாங்கிவிட்டு எல்லாருக்கும் 'நன்றி' என கூறிவிட்டு செல்பவர்கள் மத்தியில் டி காப்ரியோ ஒரு தூதுவராக இருந்து இந்த குளோபல் வார்மிங்கை தடுக்க தன்னால் இயன்ற குரலை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். டி காப்ரியோ போன்ற உலக நாயகர்களின் குரல் எல்லா திசையும் ஓங்கி ஒலிக்கும் என அவர் அறிந்தே இருக்கிறார். குறிப்பாக, தேவைப்படும் மக்களுக்காகவும் இடர்களுக்காகவும் கொடையளிப்பதிலும் தீவிரம் காட்டுபவர். இப்படியாக, நல்ல நடிகராக மட்டும் இல்லாமல், நல்ல மனிதராகவும் இருக்க முயற்சிக்கும் டி காப்ரியோ போன்றவர்கள் என்றும் கொண்டாடப்பட வேண்டியவர்களே!

- பால கணேசன்