கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு நடிகர் ஆரியும், ஜி.வி.பிரகாஷ்குமாரும் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
ஓகி புயல் காரணமாக கடலுக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பலர் வீட்டுக்குத் திரும்பவில்லை. பலரின் உடல்கள் கேரளாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மீனவர்களை தேடும் பணியை அரசு தீவிரப்படுத்த வேண்டும் மீனவ மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர்கள் ஆரி மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் அம்மாவட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். அவர்கள் கூறும்போது, ’இங்கே இதுவரை மொத்தம் 60க்கும் மேற்பட்ட மக்கள் இறந்ததாக கூறுகிறார்கள். சின்னதுறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரெம்யாஸ், ரஜுஸ்,ஜெயின், ஆண்டனி என நால்வர் உயிர் இழந்துள்ளனர். அந்த குடும்பத்தில் அனைத்து ஆண்களும் இறந்துவிட்டார்கள். அவர்களை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது. இதுவரை 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் வீடு திரும்பவில்லை என்று கூறும் போது மனது படபடக்கிறது. மீனைத்தேடி கடல் சென்றவர்கள் பிணங்களாக வருகிறார்கள். இதை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்’ என்றனர்.