சினிமா

ஒரு சிறுவனுக்கும், ஃபிலிம் ரோல் சினிமாவுக்கும் இடையிலான பிரிக்கமுடியா பிணைப்பு! #PTReview

ஒரு சிறுவனுக்கும், ஃபிலிம் ரோல் சினிமாவுக்கும் இடையிலான பிரிக்கமுடியா பிணைப்பு! #PTReview

webteam

ஃபிலிம் ரோல் சினிமாவின் மீது ஒரு சிறுவனுக்கு ஏற்படும் ஈர்ப்பு அவனை என்னவாக மாற்றுகிறது என்பதே `செலோ ஷோ’ என்ற குஜராத்தி படத்தின் கதை. 2022ம் ஆண்டுக்கு இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது இந்தப் படம். இந்தியாவில் இன்று வெளியாகியிருக்கிறது.

குஜராத்தில் உள்ள சலாலா என்ற பகுதியைச் சேர்ந்தவன் ஒன்பது வயது சிறுவன் சமய் (பாவின் ரபாரி). அவனுடைய குடும்பத்தின் அடுத்த நாள் வாழ்வாதாரமே, ரயில் நிலையத்தில் டீ விற்கும் தந்தையின் வியாபாரத்தைப் பொறுத்ததுதான். திடீரென ஒருநாள் அவனுடைய வாழ்வை மாற்றும் ஒரு அதிசயம் நிகழ்கிறது. அவனது தந்தை குடும்பத்துடன் சினிமா பார்க்க அழைத்துச் செல்கிறார். எல்லோரும் திரையின் மீது கவனம் குவித்திருக்க, சமய் மட்டும் பின்னாலே ப்ரொஜெக்டரில் இருந்து வரும் ஒளியின் மீது ஈப்படைகிறான்.

இனி தன்னை தியேட்டருக்கு தன் தந்தை அழைத்து வர எத்தனை வருடங்கள் ஆகுமோ என நினைக்கும் சமய், அவனாகவே திரையரங்க ஆப்ரேட்டருடன் நட்பாகி தினமும் படங்களைப் பார்க்கிறான். ஃபிலிம் ரோல்களும், ரீல் பெட்டிகளும், ப்ரொஜக்டர் இயக்கமும் என அந்த உலகம் அவனுக்கு ஒரு பள்ளிக்கூடம் போல் ஆகிறது. தான் வளர்ந்து ஒரு சினிமா இயக்குநர் ஆக வேண்டும் என விரும்புகிறான். அதற்கு முன், ஒரு ஃபிலிம் ரோலை திரைப்படமாக ஒளிவீச வைக்கும் வித்தையை புரிந்து கொள்ள முயல்கிறான். இந்த முயற்சி என்ன ஆகிறது? காலம் அவனுக்காக பதுக்கி வைத்திருக்கும் அதிர்ச்சி என்ன? என்பதுதான் மீதிக் கதை.

தன் வாழ்விலும், தன்னுடைய நண்பர் வாழ்விலும் நடந்த நிஜ சம்பத்தை `செலோ ஷோ’ மூலம் சினிமாவாக மாற்றியிருப்பதாக சொல்லியிருந்தார் இயக்குநர் பான் நளின். படத்தின் கதை. ஒரு சிறுவனுக்கு திரைப்படங்கள் மீதான ஆர்வம் பற்றியது எனத் தோன்றும். ஆனால் உண்மையில் இயக்குநர் காட்சிப்படுத்தி இருப்பது ஒரு சிறுவனுக்கும் ஃபிலிம் ரோல் சினிமாவுக்கும் இடையிலான பிணைப்பை.

சினிமா டிஜிட்டல் ஆவதற்கு முன்பாக இருந்த காலகட்டத்தை, மிக இயல்பாக பதிவு செய்திருக்கிறார். டிஜிட்டல் சிறந்ததா, ஃபிலிம் சிறந்ததா என்ற வீண் பேச்சுகளுக்குள் நுழையாமல், ஃபிலிம் ரோல் சினிமாவுக்கான அந்திம காலத்தை பதிவு செய்யும் ஒரு ஆவணமாக மட்டும் அணுகியிருக்கிறார் இயக்குநர்.

சமய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாவின் ரபாரி மிக இயல்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் முறையாக திரையில் வரும் சித்திரங்களை வியப்பது, பிலிம் சுருள்கள், ஒரு மாயாஜாலம் போல் வெண் திரைமீது விரிவதை ஆச்சர்யத்துடன் பார்ப்பது, தொடர்ந்து அதன் பின்னால் இருக்கும் மர்மத்தைப் பற்றியே சிந்திப்பது என பல காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். சமயின் அம்மாவக வரும் ரிச்சா மீனா, அப்பாவாக வரும் திபன் ராவல், புரொஜக்டரை இயக்கும் ஃபாசிலாக வரும் பாவேஷ் ஸ்ரீமலி ஆகியோரின் நடிப்பும் மிக சிறப்பு.

படத்தில் இரண்டு இடங்களில் வரும் ரஜினிகாந்த் ரெஃபரன்ஸுக்கு அப்ளாஸ் பறக்கிறது. படம் முழுக்க ஆங்காங்கே இயல்பாக வெளிப்படும் ஹூமரும் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, சமய் தன் பெயருக்கான காரணத்தை சொல்வது, ரீல் பெட்டியை வைத்து சிறுவர்கள் செய்யும் வேலைகள் எனப் பலவும்.

ஸ்வொப்னில் ஒளிப்பதிவு இந்தப் படத்திற்கான அழகை கூட்டுகிறது. திரையரங்கில் ப்ரொஜக்டரின் ஒளியை கைகளில் தொட்டுப்பார்க்க சமய் முயலும் காட்சி, ரயில் பெட்டிக்குள் தியேட்டர் போன்ற அமைப்பை ஏற்படுத்த முயலும் காட்சி, இறுதிக் காட்சியில் ஃபேக்டரிக்குள் நடக்கும் விஷயங்கள் எனப் பல இடங்களில் அட்டகாசம். சினிமாவைப் பற்றி சமய்க்கும் - ஃபாசிலுக்கும் இடையே நடக்கும் உரையாடல், சாதிய பகடியாக தன் தந்தையிடம் சமய் பேசுவது என சில இடங்களில் வசனங்களும் கவனம் பெறுகிறது.

ஒரு மினி தியேட்டரையே உருவாக்கும் அளவுக்கு அந்த சிறுவர்கள் செய்யும் முயற்சி மட்டும் நம்புவதற்கு ஏற்றதாக இல்லை. ஆனால் உணர்வு ரீதியாக அந்தக் காட்சி தரும் மன நிறைவு அழகு. எதார்த்த வாழ்வில் இருந்து விட்டு விலகி வேறொரு உலகத்துக்கு அழைத்துச் செல்லும் ஒரு ஒளியாக ப்ரொஜக்டரின் கலர் கதிர்களைப் பார்த்தான் சமய். ஒரு கட்டத்தில் அந்த ஒளியே வேறு வடிவத்துக்கு மாறுவதும், கூடவே அவன் வாழ்வு மாறுவதுமாக முடிகிறது படம்.

இந்தப் படத்துக்கான ஆஸ்கர் வாய்ப்பு எந்த அளவு இருக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால், ஒரு எளிமையான அழகான படம் பார்த்த அனுபவம் மட்டும் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

- ஜான்சன்