சினிமா

‘கொலையுதிர் காலம்’ சந்தித்த சிக்கல்கள்.. இறுதியாக நீதிமன்றம் கொடுத்தது அனுமதி..!

‘கொலையுதிர் காலம்’ சந்தித்த சிக்கல்கள்.. இறுதியாக நீதிமன்றம் கொடுத்தது அனுமதி..!

Rasus

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'கொலையுதிர் காலம்' படத்தின் வெளியீட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா திரைப்படம் தயாரிக்க முடிவெடுத்தவுடன் முதன் முதலில் ஒப்பந்தம் செய்த படம் 'கொலையுதிர்காலம்'. இயக்குநர் சாக்ரி டோலட்டியுடன் இணைந்து தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் படத்தை தயா‌ரிக்க முடிவு செய்தார் யுவன். தமிழுக்கு நயன்தாராவும், ஹிந்திக்கு தமன்னாவும் ஹீரோயின்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். 2016-ம் ஆண்டு நவம்பரில் கொலையுதிர் காலம் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு, படத்துக்கான வேலைகளும் தொடங்கின. இந்நிலையில் சில பிரச்னைகள் காரணமாக தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திலிருந்து விலகினார்.

யுவன் சங்கர் ராஜா விலகிய பின்னர், கிடப்பில் கிடந்த ‘கொலையுதிர் காலம்’ படத்தை மதியழகன் என்பவர் தயாரிக்க முன்வந்தார். இதன்பின் சின்ன சின்ன இடைவெளிக்கு மத்தியில் ‘கொலையுதிர் காலம்’ படத்தின் வேலைகள் நடைபெற்று முடிந்தன. இருந்தாலும் படத்தை வெளியிடுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. இந்த பிரச்னைகளை எல்லாம் முடித்த தயாரிப்பாளர் ஜூன் 14-ம் தேதி படத்தை வெளியிட தயாரானார். படத்திற்கு ரிலீஸ் தேதியை உறுதி செய்த நிலையில் ‘கொலையுதிர் காலம்’ படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் தயாரிப்பாளர் இறங்கினார்.

ஆனால் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் ‘கொலையுதிர் காலம்’ நாவலின் தலைப்பை, பாலாஜி கே குமார் என்பவர் 10 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாகவும், அதை தன்னிடம் எந்த உரிமையும் பெறாமல் நயன்தாராவின் படத்திற்கு பயன்படுத்தியுள்ளனர் என்றும் உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் ‘கொலையுதிர் காலம்’ படத்திற்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கொலையுதிர்காலம் என்ற தலைப்பு நாவல் காப்புரிமை சட்டத்தில் பதியப்படவில்லை என்றும், அதனால் அந்த தலைப்பை பயன்படுத்திக்கொள்ள தயாரிப்பாளர் மதியழகனுக்கு தடையில்லை என்றும் தீர்பளித்தார். இதன் மூலம் கொலையுதிர்காலம் படத்தின் மீது இருந்த இடைக்காலத் தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.