டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராகத் தமிழ் திரைப்பட தயாரிப்பளர் சங்கத்தினர் மேற்கொண்ட வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய திரைப்படங்கள் நாளை முதல் திரைக்குவர காத்திருக்கின்றன.
டிஜிட்டல் நிறுவனங்கள் வசூலிக்கும் விர்ச்சுவல் பிரிண்டிங் ஃபீஸ் எனப்படும் வி.பி.எஃப் கட்டணத்தை நீக்க வேண்டும், வெளிப்படைத் தன்மையோடு கூடிய கணினி முறை டிக்கெட் விற்பனையை அமல்படுத்த வேண்டும், ஆன்லைன் டிக்கெட் விலையை குறைக்க வேண்டும் ஆகியவை தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதான கோரிக்கைகளாக இருந்தன. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அச்சங்கத்தினர் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தால், 47 நாட்களாக புதிய படங்கள் எதுவும் திரையிடப்படவில்லை. டிக்.டிக்.டிக், கரு, கஜினிகாந்த், இரும்புத்திரை, காளி, பாஸ்கர் ஒரு ராஸ்கல், கோலி சோடா 2 உள்ளிட்ட 30 திரைப்படங்களின் வெளியீடு தள்ளிப் போனது. இந்த நிலையில் கடந்த 17ம் தேதி நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, புதிய படங்களை வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டது
இந்த நிலையில் முதல் படமாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மெர்குரி படம் மட்டுமே வெளியாகிறது. இது தவிர இன்னும் இரண்டு படங்களை வெளியிட பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. ஆனால் அப்படக்குழுவினர் ரிலீஸுக்கு உடனடியாகத் தயாராக முடியாத காரணத்தால் நாளை மெர்குரி படம் மட்டும் திரைக்கு வருகிறது. இதை தொடர்ந்து ஏப்ரல் 27ம் தேதி முதல் வாரத்திற்கு 3 புதிய படங்கள் வெளியிடுவது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. அதில் பெரிய பட்ஜெட் படங்களுடன் சின்ன பட்ஜெட் படங்களும் வெளியாகும் நிலை உருவாக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர். பதிவு செய்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றால் மீண்டும் பதிவு செய்து மட்டுமே படத்தை வெளியிட முடியும் என்ற விதியை தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கியுள்ளது. இது குறைந்த பட்ஜெட் படங்களுக்கு நன்மையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது