பாலிவுட் நடிகையான ஜாக்குலின் தன்னை எந்தவித எதிர்பார்ப்புமின்றி விரும்பியதால், அவரை தவறாக காட்டுவதை விட்டுவிடும்படி சிறையில் உள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடிதம் ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாகக்கூறி இவர், தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள் உள்ளன.
மேலும், அ.தி.மு.க. பிளவுப்பட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக, டி.டி.வி.தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் டெல்லி போலீசாரால் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சுகேஷ் சந்திரசேகர் மீது 21-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் முதலீட்டாளர்கள் சிவிந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங் ஆகியோர், ரூ.2000 கோடி பணமோசடி வழக்கில் 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கிலிருந்து அவர்களை விடுவிப்பதாகக் கூறி, அவ்விருவரின் மனைவிகளிடமிருந்து, சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்துகொண்டே ரூ.200 கோடி பணம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது காதலி லீனா மரியா பால் உட்பட8 பேர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின்போது, சுகேஷ் சந்திரசேகர், பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரை, ரூ.9 லட்சம் மதிப்புள்ள 4 பெர்சிய பூனைகள் உட்பட ரூ.10 கோடி அளவில் பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
ஜாக்குலின் பெர்னாண்டஸ் தவிர, மற்றொரு பாலிவுட் நடிகையான நூரா ஃபதேயிக்கும் ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ காரை சுகேஷ் சந்திரசேகர் பரிசளித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தவழக்கு தொடர்பாக ஏற்கெனவே ஜாக்குலினும், நூரா ஃபதேயியும் அமலாக்கத் துறையினால் விசாரிக்கப்பட்டனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில், ஜாக்குலின் பெர்னாண்டஸ் - சுகேஷ் சந்திரசேகர் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளிவந்தன.
இந்நிலையில் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர், இந்த விவகாரம் தொடர்பாக தனது வழக்கறிஞரிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருவரையொருவர் அன்பும், மரியாதையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு காதலித்தோம். எங்களது தனிப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருவது மிகுந்து வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதை நான் கடந்த வாரம் செய்திகளின் வாயிலாக தெரிந்து கொண்டேன்.
இது ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அத்துமீறி நுழைவதாகும். நான் முன்பே குறிப்பிட்டதைப்போல நானும், ஜாக்குலினும் விரும்பினோம். எங்களுக்கிடையில் இருந்த உறவு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது. அவரும் என்னை எந்த எதிர்பார்ப்புமின்றி விரும்பினார். அவருக்கு நான் கொடுத்த பரிசுப் பொருட்கள் எல்லாம் அன்பின் அடிப்படையில் கொடுத்தது.
இந்த வழக்குக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அவர் என்னை விரும்பியதை தவிர வேறு எந்த குற்றமும் செய்யவில்லை. அதனால் தயவுசெய்து ஜாக்குலினை தவறாகக் காட்டவேண்டாம் என்று அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு சுகேஷ் சந்திரசேகர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.