விஜய் - கௌதம் மேனன் web
சினிமா

தளபதி 69 அப்டேட்: லியோ-க்கு பின் இணையும் விஜய் - கௌதம் மேனன் காம்போ! உடன் கைக்கோர்க்கும் பிரியாமணி!

Rishan Vengai

நடிகர் விஜய் அரசியலில் முழுமையாக களம் இறங்கும் முன் 2 படங்களில் நடிக்கவிருப்பதாக அறிவித்தார். அதில் ஒருபடமான வெங்கட் பிரபு இயக்கத்திலான The GOAT (THE GREATEST OF ALL TIME), கடந்த செப் 5-ம் தேதி திரையரங்கில் வசூல்வேட்டை நடத்தியது. இன்று இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள நிலையில், படத்தின் டைரக்டர்ஸ் கட் விரைவில் வெளியிடப்படும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

GOAT VIJAY

GOAT படமானது நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, த்ரிஷா (கேமியோ), லைலா ஆகியோருடன் தோனி மற்றும் அஜித் ரெஃபரன்ஸுடன் முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களுக்காக விஜய்யை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விஜயின் சினிமா வாழ்க்கையில் கடைசி படமாக பார்க்கப்படும் விஜய் 69 படம் முழுக்க முழுக்க அனைவரும் விரும்பக்கூடிய கமர்சியல் படமாக இருக்கும் என்றும், அதில் அரசியல் சார்ந்த கருத்துகளும் இருக்கும் என்றும் இயக்குநர் ஹெச் வினோத் தெரிவித்திருந்தார்.

H Vinoth - Vijay

இந்நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பெயரை தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.

விஜயுடன் மீண்டும் இணையும் கௌதம் மேனன்..

நடிகர் விஜயின் 69வது படமானது ஹெச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகவிருக்கிறது. படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷ்ன் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியானது.

இந்நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறது தயாரிப்பு நிறுவனம். அதன்படி தற்போது வரை, அனிமல் பட வில்லனான பாபி தியோல், பீஸ்ட் படத்தில் சேர்ந்து நடித்த பூஜா ஹெக்டே மற்றும் பிரேமலு பட நடிகை மமிதா பைஜு முதலியோர் நடிப்பதாக போஸ்டர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அடுத்த போஸ்டரை வெளியிட்டிருக்கும் நிறுவனம், இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் விஜய்69 படத்தில் இணைந்திருப்பதாக அறிவித்துள்ளது. விஜய்யின் லியோ படத்தில் கௌதம் மேனன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

உடன் நடிகை பிரியாமணி படத்தில் இணைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரியாமணி முதல்முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.