சினிமா

பாலிவுட் கனவு முதல் மோமோஸ் விற்பனை வரை... கொரோனா பேரிடர் புரட்டிப்போட்ட பெண்ணின் கதை!

பாலிவுட் கனவு முதல் மோமோஸ் விற்பனை வரை... கொரோனா பேரிடர் புரட்டிப்போட்ட பெண்ணின் கதை!

webteam

தனிப்பட்ட, தொழில்முறை, பொருளாதார அல்லது சமூகப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் ஏதோ ஒரு வகையில் புரட்டப் போட்டிருக்கிறது கொரோனா பேரிடர். ஏழைகள், எளியவர்கள் என யாரையும் பாகுபாடு இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி, கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்ட ஓர் இளம் திரைப்பட ஒளிப்பதிவுக் கலைஞரின் வாழ்க்கையை பற்றிதான் இப்போது பார்க்க போகிறோம்.

கொரோனா பேரிடர் வருவதற்கு முன்பு வரை 5 ஆண்டுகளாக பாலிவுட்டில் உதவி கேமரா இயக்குநராக பணிபுரிந்த கட்டாக்கின் ஜஞ்சிர்மங்கலாவைச் சேர்ந்த சுச்சிஸ்மிதா ரூட்ரே என்ற இளம்பெண்ணின் வாழ்க்கைதான் அது.

வருண் தவான், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மாதுரி தீட்சித், சஞ்சய் தத் மற்றும் இம்ரான் ஹாஷ்மி என பல பாலிவுட் சூப்பர் நட்சத்திரங்கள் உடன் பணியாற்றி இருக்கிறார் சுச்சிஸ்மிதா. பல ஆண்டுகளாக கேமரா உதவி குழுவில் இருந்தாலும், ஒருநாள் ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற கனவுடன் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் பணியாற்றி வந்துள்ளார்.

ஆனால், அவரின் கனவுகளை நொறுக்கும் விதமாக வந்தது கொரோனா பேரிடரும், அதனால் விதிக்கப்பட்ட லாக்டவுனும். லாக்டவுனால் வேலையில்லாத சூழல் வர, சில மாதங்களில் அவரின் கையில் இருந்து சேமிப்பு காசும் கரைந்தது. எனினும், மும்பையை விட்டு வெளியேறவில்லை. மும்பையில் 8 மாதங்கள் தாக்குப்பிடித்து பார்த்தார். அதன்பின் முடியவில்லை. இறுதியாக இந்த ஆண்டு ஜனவரியில் தனது சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இனிமேலும் பட்டினியால் காலம் தள்ள முடியாது என்பதை உணர்ந்து சுச்சிஸ்மிதா இந்த முடிவை எடுத்தார்.

இதில் சோகம் என்னவென்றால், வீடு திரும்ப கூட சுச்சிஸ்மிதாவிடம் காசு இல்லை. ஆனால், அந்த சமயத்தில்தான் அமிதாப் மற்றும் சல்மான்கான் ஆகியோர் உதவி இயக்குநர்களுக்கு உதவ, அதில் கிடைத்த தொகையில் சொந்த மாநிலமான ஒடிஷாவுக்கு விரைந்தார். சொந்த ஊரிலும் வேலை செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட, மாற்றி யோசித்த சுச்சிஸ்மிதா நினைவில் உதித்தது மோமோஸ் ஸ்டால் போடுவது. மும்பையில் இருந்த காலத்தில் தனது ரூம்மேட்டுடன் இணைந்து மோமோஸ் கற்றுக்கொண்டது கைகொடுக்க அதையே கையிலெடுத்துள்ளார்.

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. வடகிழக்கு மற்றும் மும்பையில் தயாரிக்கப்படும் மோமோஸ்களை போல அல்லாமல் ஒடிஷா பகுதியில் விற்கப்படுபவை அவ்வளவு தரம் நிறைந்தவையாகவும், சுவை கொண்டதாகவும் இருந்ததால் இந்த பிசினெஸ் கைகொடுக்கும் என்று எண்ணி மோமோஸ் ஸ்டால் திறந்து நடத்தி வருகிறார்.

``வாடிக்கையாளர்களுக்கு அசல் சுவை வழங்குவதற்காக எனது மோமோ ஸ்டாலை திறக்க முடிவு செய்தேன். என் ரூம்மேட் மோமோஸை உருவாக்கினார், நான் அவளிடமிருந்து கற்றுக்கொண்டேன். இப்போது வெஜ் மோமோ, காளான் மோமோ, பன்னீர் மோமோ, தந்தூரி மோமோ, வறுத்த மோமோ டு பான் ஃப்ரைட் மற்றும் மிளகாய் மோமோ என பலவற்றை உருவாக்கி மக்களுக்கு விற்று வருகிறேன்" எனக் கூறும் சுச்சிஸ்மிதாவின் ஸ்டால் தற்போது வெற்றிகரமாக நடந்து வருகிறது.

உடனடி பிழைப்புக்காக விற்பனை வியாபாரத்தை மேற்கொண்ட போதிலும் சுச்சிஸ்மிதாவின் கனவு இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை. நிலைமை மேம்பட்ட பின் விரைவில் மும்பைக்குச் சென்று மீண்டும் தனது கனவுகளைத் தொடருவேன் என்று உறுதிபட கூறுகிறார்.