இசையமைப்பாளர் தேவா என்றாலே நமது நினைவுக்கு வருவது கானா பாடல்கள்தான். தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அழைத்துவந்ததில் பெரும் பங்கு இவரையேச் சாரும். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர்.
"காத்தடிக்குது காத்தடிக்குது... காசிமேடு காத்தடிக்குது...", "திருப்பதி ஏழுமலை வெங்கடேசா...", "கவலைப்படாதே சகோதாரா..." உள்ளிட்டப் பல பாடல்களை இன்றும் பட்டித்தொட்டியெல்லாம் அவ்வப்போது கேட்க முடிகிறது.
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள மாங்காட்டில் பிறந்தவர் இசையமைப்பாளர் தேவா. இவரது இயற்பெயர் தேவநேசன் சொக்கலிங்கம். சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த தேவா, இரவுநேரங்களில் திரைப்படங்கள் பார்த்துவிட்டு வீடு திரும்பவது வழக்கம். அந்த சமயங்களில் அவர் கேட்ட கானா இசையானது, அவரை வெகுவாக ஈர்த்துள்ளது. சென்னை கானா மீதான அந்த ஈர்ப்புதான் பின்னாளில் அவரது படங்களில் கானா பாடல்களாக உலகமெங்கும் ஒலித்தது.
ஆரம்ப காலங்களில் இசைக் கலைஞர்களான காமேஷ், ராஜாமணி ஆகியோரிடம் உதவியாளாராக பணியாற்றிய தேவா, அவர்களிடம் இருந்து ஆர்மோனியம் வாசிப்பை கற்றுக்கொண்டார். அதன் பின்னர் அப்போதைய இசைக் கலைஞர்களான சந்திரமொளலி, எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பலரிடம் ஆர்மோனிய வாசிப்பாளாராக பணியாற்றினார். மேற்கத்திய இசையை மாஸ்டர் தன்ராஜிடம் கற்றுக்கொண்டார். அதன் பின்னர் வறுமையின் காரணமாக தூர்தர்ஷனில் அலுவலகப் பணியாளாராக பணியாற்றினார். அப்போது ஒருமுறை அங்கிருந்த பியானோவைத் தொட்டதற்காக 15 நாள்கள் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதை ஒரு நேர்காணலில் அவரே குறிப்பிட்டிருக்கிறார்.
திரைப்படங்களில் இசையமைக்க சரிவர வாய்ப்புகள் அமையாததால் ஒருக்கட்டத்தில் அவரது கவனம் பக்திப் பாடல்கள் பக்கம் திரும்பியது. கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களுக்கு இசையமைத்தார். அவரது பாடல்கள் அதிக கவனம் ஈர்த்த நிலையில், மேடை ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் எம்.எஸ்.சுவாமிநாதன், தேவா திரைப்படங்களில் இசையமைக்கத் தகுதியானவர் என்று பேசினார்.
1984 ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான 'மனசுக்கேத்த மகராசா' படத்தில் இசையமைப்பாளாராக அறிமுகமானார் தேவா. அதன் பின்னர் வெளிவந்த 'வைகாசி பொறந்தாச்சு' படம் தேவாவிற்கு பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. அப்படத்தில் இடம்பெற்ற 'சின்னப்பொண்ணுதான் வெக்கப்படுது அம்மா அம்மாடி', 'தண்ணிகொடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா...' உள்ளிட்டப் பாடல்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்திற்காக அவருக்கு சிறந்த இசைக்கான தமிழக அரசின் விருது வழங்கப்பட்டது.
தமிழ் சினிமாவின் இன்றைய ஸ்டார்களான விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு தன் இசையின் மூலம் ரசிகர்களின் கவனத்தை மென்மேலும் ஈர்க்க வைத்தவர் தேவா என்றால் அது மிகையாது. அஜித்திற்காக 'பிள்ளையார்ப்பட்டி ஹீரோ நீதான் பா... நீ கருணை வைச்சா நானும் ஹீரோப்பா...' என்றப் பாடலை இசையமைத்த தேவா, 'ஆசை' படத்தில் அடுத்த எல்லையைத் தொட்டிருப்பார். 'ஆசை' படத்தில் இடம்பெற்ற "கொஞ்சம் நாள் பொறு தலைவா', "மீனாம்மா' உள்ளிட்ட பாடல்கள் அஜித்திற்கு அதிரடி ஹிட்டுகளைக் கொடுத்தது.
அஜித் நடித்த 'வாலி' திரைப்படத்திற்கு தேவாவின் இசை பெரும் பலமாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து அஜித்தின் பெஞ்ச் மார்க் திரைப்படங்களான 'காதல் கோட்டை', 'சிட்டிசன்', 'முகவரி' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார். அந்தப் படங்களின் பிண்ணனி இசை அதிக அளவு பேசப்பட்டது. 'வாலி', 'முகவரி' படங்களில் இசையமைத்தற்காக தேவாவிற்கு 'ஃபிலிம் ஃபேர்' விருதுகள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் - தேவா கூட்டணியில் 'தேவா' படத்தில் இடம்பெற்ற "ஒரு கடிதம் எழுதினேன்", "அய்ய்யோ அலமேலு", 'ப்ரியமுடன்' படத்தில் இடம்பெற்ற 'பாரதிக்கு கண்ணம்மா' உள்ளிட்ட பாடல்கள் ஆரம்ப காலத்தில் விஜய், தமிழ் சினிமாவில் பிரபலமடைவதற்கான காரணிகளில் ஒன்றாக இருந்தது. குறிப்பாக விஜய் நடித்த 'மின்சார கண்ணா', 'குஷி', 'பகவதி' உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்த அனைத்துப் பாடல்களும் எகிடுதகடு ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. 'குஷி' படத்திற்காக தமிழக அரசின் விருது மற்றும் ஃப்லிம் ஃபேர் விருதுகள் வழங்கப்பட்டன.
தேவா - ரஜினி கூட்டணி ஒரு காலத்தில் வெற்றிக் கூட்டணியாகவே பார்க்கப்பட்டது. ரஜினியின் இன்ட்ரோ சாங், தேவா இசையில் அமைந்தால் அந்தப் படம் வசூலை அள்ளப்போகிறது எனச் சொல்லப்பட்ட காலமும் உண்டு. 'அண்ணாமலை' படத்தில் 'வந்தேன்டா பால்காரன்', 'பாட்ஷா' படத்தில் 'ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்', 'அருணாச்சலம்' படத்தில் 'அதாண்டா இதாண்டா அருணாச்சல்ம் நான்தாண்டா' உள்ளிட்ட பாடல்களுக்கு ரஜின் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் லிஸ்டில் தனி இடம் உண்டு. 'பாட்ஷா' படத்தில் இடம்பெற்ற பின்னணி இசை பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, 90ஸ் கிட்ஸ்கள் இன்றளவும் முணுமுணுக்கத் தவறான திரையிசைப் பாடல்களைத் தந்தவர் இசையமைப்பாளர் தேவா.
ரஜினியின் 'மாஸ்' படங்கள் மட்டுமல்லாது, கமலின் 'அவ்வை ஷண்முகி', 'பஞ்சதந்திரம்' உள்ளிட்ட நகைச்சுவைப் படங்களிலும் தனது அபாரத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார் தேவா. இவற்றுடன், மெலடி மெட்டுகளிலும் அசத்தியவருக்கு 'தேனிசைத் தென்றல்' என்ற அடையாளமும் உள்ளது. இன்று 70-வது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு வாழ்த்துகள்!
- கல்யாணி பாண்டியன்