நடிகை கடத்தி பாலியல் வன்முறைக்குள்ளான வழக்கில் கைது செய்து சிறையில் உள்ள பல்சர் சுனில் மீது, மேலும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி மலையாள நடிகை ஷூட்டிங் முடிந்து திருச்சூரில் இருந்து கொச்சி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, அவர் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக கொச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தச் சம்பவம் தென்னிந்தியத் திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. நடிகை கடத்தல் தொடர்பாகப் பல்சர் சுனில் உள்ளிட்ட 7 பேரைக் கேரளப் போலீஸார் கைது செய்தனர். பல்சர் சுனிலின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப்தான் நடிகையின் கடத்தலுக்குக் காரணம் என்று பலர் நம்பியிருந்தனர். நடிகர் திலீப்புக்கு எதிராகப் போலீஸாருக்கு எந்தச் சரியான ஆதாரமும் சிக்காமல் இருந்தது. அதன்பின் பல ஆதாரங்களும் போலீஸாரிடம் சிக்க, இம்மாதம் 11-ஆம் தேதி நடிகர் திலீப்பைக் கைது செய்தனர்.
இந்நிலையில், பல்சல் சுனில் மீது தற்போது மற்றுமொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இசை நிறுவன உரிமையாளர் ஜானி சாகரிகா என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2011-ல் தயாரிப்பாளர் ஜானி சகாரிகா படம் ஒன்றைத் தயாரித்தார். அதில் நடித்த நடிகையை, டெம்போ டிராவலர் வேனில் படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்ல வந்தார் பல்சர் சுனில். ஆனால் ஷூட்டிங் லொகேஷனுக்கு செல்லாமல் வாகனம் வேறு வழியில் செல்வதை அறிந்த அந்த நடிகை, தயாரிப்பாளருக்கு போனில் சொன்னார். இதையடுத்து சகாரிகா வேறு காரில் டெம்போ டிராவலரை பின் தொடர்ந்தார். இதனால் பீதியடைந்த சுனில் வேனை ஓட்டலில் நிறுத்திவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். இந்த சம்பவம் கேரள சினிமாவில் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதுவும் பாலியல் வன்முறைக்கான முயற்சியாக இருக்கலாம் என இப்போது பல்சர் சுனில் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.